இன்றைய TOP 10 செய்திகள்: இபிஎஸ் விளக்கம் முதல் AI தலைவர் வரை
சேலத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஜப்பானில் ஒரு அரசியல் கட்சிக்கு செயற்கை நுண்ணறிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது, மேலும் வட கொரியாவில் ஆங்கில வார்த்தைகளுக்கு கிம் ஜாங்-உன் தடை விதித்துள்ளார்.

சேலத்தில் கர்ஜித்த ஈபிஎஸ்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த நான் முகத்தை துடைத்ததை புகைப்படமாக வெளியிட்டு நான் முகத்தை மறைத்துக் கொண்டு வந்ததாக பொய் செய்தி பரப்பப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சம்பவம் செய்த எடப்பாடி
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, நாங்கள் கோடு போட்டால் ரோடு போட்டுவிடுவார் என்று புகழ்ந்து பேசுகிறார். இது முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி திமுக.வில் இணைவதற்கு முன்பாக என்ன பேசினார் என்று தெரியுமா?" என்று கூறி பழைய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
ஐசியூவில் ரோபோ சங்கருக்கு என்னதான் ஆச்சு?
பிரபல நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் பின்னடைவு ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள்
வாக்காளர் மோசடி நடந்ததாகவும், வாக்குத் திருடர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பு அளிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
பாஜகவுக்கு தினகரன் போட்ட கண்டிஷன்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பத்து ஆண்டுகளாக தான் யாரிடமும் தொடர்பில் இல்லை என்றும், நாளுக்கு ஒரு பேச்சு பேசுபவன் தான் இல்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அவரை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசியல் கட்சிக்குத் தலைவரான AI பென்குயின்!
ஜப்பானின் அரசியல் கட்சி, அதன் நிறுவனர் ராஜினாமா செய்த பிறகு, "AI பெங்குவின்" என்ற செயற்கை நுண்ணறிவு மாடலை புதிய தலைவராக நியமித்துள்ளது. இந்த AI, கட்சியின் நிர்வாக முடிவுகளை மட்டுமே எடுக்கும், கொள்கைகளை வகுக்காது.
கிம்மின் அடாவடி உத்தரவு!
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், ஆங்கில வார்த்தைகளான "ஹேம்பர்கர்," "ஐஸ்கிரீம்," மற்றும் "கரோக்கி" ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளார். வட கொரிய மொழி மற்றும் அதன் சொற்களை ஊக்குவிக்கும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடை பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு கலாசார ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தடை உத்தரவு போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பதக்கத்தை கோட்டை விட்ட நீரஜ் சோப்ரா!
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா 8-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தார். அதே சமயம், அறிமுக வீரரான சச்சின் யாதவ் 4-வது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
யூடியூப் சேனலுக்கு லைசென்ஸ் கட்டாயம்!
கர்நாடகத்தில் யூடியூப் செய்தி சேனல்களைத் தொடங்க இனி உரிமம் கட்டாயமாக்கப்படுமா என கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தொலைக்காட்சிகளுக்கு இருப்பது போலவே, யூடியூப் செய்தி சேனல்களுக்கும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை அரசு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியுடன் அண்ணாமலை ஆலோசனை
அண்ணாமலைக்கு பதில் சொல்லிய ரஜினி, வேறு எதுவுமே பேசாமல் அதிர்ந்து போய் உள்ளார். பாஜகவின் டெல்லி தலைமை இப்போதும் ரஜினியின் தொடர்பில் இருப்பதால் அண்ணாமலை தன் நிலையை ரஜினியிடம் எடுத்துக் கூறியதாக சொல்கிறார்கள்.