அட! சிப் வசதியுடன் இ-பாஸ்போர்ட் வந்தாச்சு! இனி வெளிநாடு போறது ரொம்ப ஈசி!
இந்தியாவில் மின்னணு பாஸ்போர்ட் (இ-பாஸ்போர்ட்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்ட RFID சிப் உடன் வருகிறது, இது பாதுகாப்பை மேம்படுத்துகிறது. வழக்கமான பாஸ்போர்ட்டைப் போலவே பாஸ்போர்ட் சேவா இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் இ-பாஸ்போர்ட்
இந்திய குடிமக்களுக்கு மின்னணு பாஸ்போர்ட் (இ-பாஸ்போர்ட்) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த புதிய வகை பயண ஆவணத்திற்கு தற்போது நாடு முழுவதும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த திட்டத்தை ஏப்ரல் 1, 2024 அன்று சோதனை அடிப்படையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது.
தற்போது, ஒருசில பாஸ்போர்ட் அலுவலகங்களில் மட்டுமே இந்த இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், வரும் மாதங்களில் இந்த சேவையை மற்ற அலுவலகங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சாதாரண பாஸ்போர்ட்களிலிருந்து இவற்றை வேறுபடுத்திக் காட்ட, இதன் முன் அட்டையில், தலைப்புக்குக் கீழே ஒரு சிறிய தங்க நிற சின்னம் அச்சிடப்பட்டிருக்கும்.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இ-பாஸ்போர்ட் என்பது, வழக்கமான பாஸ்போர்ட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதில், வழக்கமான பாஸ்போர்ட்டில் உள்ள அம்சங்களுடன் டிஜிட்டல் அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் முன் அட்டையில், ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) சிப் மற்றும் ஒரு அன்டெனா ஆகியவை உட்பொதிக்கப்பட்டுள்ளன. இந்த சிப், கைரேகைகள், டிஜிட்டல் புகைப்படம், தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கிறது.
இ-பாஸ்போர்ட்டின் முக்கிய அம்சங்கள்
பாஸ்போர்ட்டின் முன் அட்டையில் மின்னணு சிப் பொருத்தப்பட்டுள்ளது. கைரேகைகள், முகப் படம் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கியது. பாதுகாப்பிற்காக என்க்ரிப்ட் செய்யப்பட்ட அணுகலுடன் கூடிய காண்டாக்ட்லெஸ் சிப் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் தயாரிக்கும் வாய்ப்புகளை இது குறைக்கிறது.
இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை
இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை, வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதைப் போன்றே உள்ளது.
- அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்குச் செல்லவும்.
- புதிய கணக்கைப் பதிவு செய்து, இ-பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
- உங்களுக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா (PSK) அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராவைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆன்லைன் மூலம் இ-பாஸ்போர்ட்டுக்கான கட்டணத்தைச் செலுத்தவும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த மையத்தில் நேர்காணலுக்கான (Appointment) நேரத்தை முன்பதிவு செய்யவும்.