பாஸ்போர்ட் குறியீட்டில் படுமோசமான பாகிஸ்தான்! இந்தியா புதிய பாய்ச்சல்!
ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, பாகிஸ்தானின் பாஸ்போர்ட் உலகின் பலவீனமான பாஸ்போர்ட்களில் ஒன்றாக உள்ளது. இது 96-வது இடத்தில் உள்ளது, வெறும் 32 இடங்களுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்க முடியும்.

பாஸ்போர்ட் ரேங்கிங்
டான் அறிக்கையின்படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து பின்தங்கியுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில், பாகிஸ்தான் 96-வது இடத்தில் உள்ளது. இது, சோமாலியா, ஏமன், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்குக் கீழே உள்ளன. பாகிஸ்தானின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வெறும் 32 இடங்களுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்க முடியும்.
கடந்த 2024-ம் ஆண்டில், ஏமனுடன் சேர்ந்து உலகின் நான்காவது மிக மோசமான பாஸ்போர்ட்டாக பாகிஸ்தானின் பாஸ்போர்ட் இருந்தது. இந்த ஆண்டு சிறிய முன்னேற்றம் இருந்தாலும், பாகிஸ்தான் இன்னும் பலவீனமான பாஸ்போர்ட்டுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
முன்னிலை வகிக்கும் நாடுகள்
சிங்கப்பூர் பாஸ்போர்ட் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை இரண்டாவது இடத்தில் உள்ளன.
டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளன. ஆஸ்திரியா, பெல்ஜியம், லக்ஸ்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், மற்றும் ஸ்வீடன் ஆகிய ஏழு ஐரோப்பிய நாடுகள் நான்காவது இடத்தில் உள்ளன.
நியூசிலாந்து, கிரீஸ் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை ஐந்தாவது இடத்தில் உள்ளன.
இந்தியா மற்றும் பிற நாடுகள்
இந்தியா கடந்த ஆறு மாதங்களில் எட்டு இடங்கள் முன்னேறி, 85-வது இடத்திலிருந்து 77-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளாக இருந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, இந்த குறியீட்டில் சரிவை சந்தித்துள்ளன. இங்கிலாந்து 6-வது இடத்திலும், அமெரிக்கா 10-வது இடத்திலும் உள்ளன.
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு என்பது 199 வெவ்வேறு பாஸ்போர்டுகளின் விசா-இல்லாத பயணத்திற்கான சலுகைகளை மதிப்பிடுகிறது. ஒரு பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா இல்லாமலோ அல்லது விசா-ஆன்-அரைவல் (Visa-On-Arrival) அனுமதி அல்லது எலக்ட்ரானிக் பயண அனுமதி (ETA) ஆகியவற்றின் மூலம் பயணம் செய்ய முடியுமானால் அதற்கு 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது. விசா தேவைப்படும் இடங்களுக்கு 0 மதிப்பெண் வழங்கப்படுகிறது.