- Home
- Tamil Nadu News
- ராக்கெட் வேகத்தில் உயரும் தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்
ராக்கெட் வேகத்தில் உயரும் தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? ஷாக்காகி நிற்கும் இல்லத்தரசிகள்
தக்காளி விலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மழை, வெயில் மாறி மாறி வருவதால் செடியிலேயே தக்காளி வெம்பி விடுவதும், விவசாயிகள் மாற்று பயிர்களில் ஆர்வம் காட்டுவதும் தக்காளி விளைச்சல் குறைவுக்குக் காரணம்.

சமையலும் காய்கறிகளும்
சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய பங்கு வகிக்கும், ரசம், சாம்பார் முதல் பிரியாணி சமைப்பதாக இருந்தாலும் குறைந்தது ஏதாவது காய்கறிகள் கண்டிப்பாக தேவை. காய்கறிகள் இல்லாத உணவு ருசியை கொடுக்காது. எனவே காய்கறி சந்தைகளுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து லாரிகளில் மூட்டை, மூட்டையாக பச்சை காய்கறிகள் வந்து குவியும். அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை சமையலில் முக்கியமாகும்.
எனவே காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் எது வாங்குகிறார்களோ இல்லையோ தக்காளி, வெங்காயம் கண்டிப்பாக வாங்குவார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயை தொட்டது பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்த சில மாதங்களில் சரசரவென குறைந்து ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
உயரும் தக்காளி விலை
இதனால் பை நிறைய தக்காளியை இல்லத்தரசிகள் வாங்கி சென்றனர். தற்போது இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தக்காளி விலையானது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ 50 முதல் 80 ரூபாய் வரை சில்லரை வர்த்தகத்தில் விற்பனையாகிறது. வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தொடும் எனவும் வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை கூறி வருகிறார்கள்.
தக்காளி விலை உயர்வுக்கு பல வித காரணங்கள் கூறப்படுகிறது. மழை மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் செடியிலேயே தக்காளி வெம்பி விடுவதாகவும், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் மாற்று பயிர்களில் ஆர்வம் காட்டுவதால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதாக கூறுகின்றனர்.
தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
மழை மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 1200 டன் தக்காளி வர வேண்டிய நிலையில், 800 டன்னாக குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,
கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 45க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
கத்திரிக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது