- Home
- Tamil Nadu News
- TN Schools Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! 3 நாட்கள் கூடுதல் விடுமுறை! மாணவர்கள் குஷி!
TN Schools Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! 3 நாட்கள் கூடுதல் விடுமுறை! மாணவர்கள் குஷி!
TN Schools Reopening: பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

பள்ளிகளுக்கு முழு ஆண்டு விடுமுறை
தமிழக பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டு இருந்தது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக விடுமுறை இருந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கடுமையாக வெளுத்தி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோர்கள், கல்வியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழகத்தில் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், தமிழகத்தில் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. அதாவது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், '2026-2027 கல்வியாண்டில், நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 1.06.2026 அன்றும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை 4.06.2026 அன்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதியை உறுதி செய்வதற்கும், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான திறப்புத் தேதியைக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும் முறையீடுகளும் பெறப்பட்டன.
வெப்பம் தொடர வாய்ப்புள்ளது
மேலும், ஜூன் முதல் வாரத்திற்கான தற்போதைய வானிலை நிலவரங்களும் முன்னறிவிப்புகளும், மாநிலத்தின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய செயல்பாடு, விட்டுவிட்டு பெய்யும் மழை, ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்பம் ஆகியவை தொடர வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த வளாகத் தயார்நிலை தொடர்பான பள்ளிகளின் ஆயத்தத் தேவைகளையும் அரசு ஆய்வு செய்துள்ளது.
1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை
தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கவனமாகப் பரிசீலித்த பின்னர், தமிழகத்தின் முதல்-அமைச்சர் ராஜ் மோகன் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வியாழக் கிழமை, 4.06.2026 அன்று ஒரே சீராக மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி, தமிழ் அபிவிருத்தி மற்றும் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் குஷி
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் தேவையான ஆயத்தப் பணிகள் முடிக்கப்படுவதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய் கூடுதலாக 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.

