- Home
- Tamil Nadu News
- சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு!
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு!
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் ₹9,335 கோடியில் அமையவுள்ளது. தமிழ்நாடு அரசு முதல் தவணையாக ₹1,964 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

கிளம்பாக்கம் - விமான நிலையம் மெட்ரோ ரயில்
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு முதல் தவணையாக ₹1,964 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ₹9,335 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இத்திட்டம், மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி உதவிக்காக காத்திருக்கிறது.
திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.9,335 கோடி
முன்னதாக, பிப்ரவரி 2025-ல் இந்த திட்டத்தின் மதிப்பீடு ₹4,080 கோடியாக இருந்தது. ஆனால் விரிவான திட்ட அறிக்கையின்படி, திட்டத்தின் மொத்த செலவு ₹9,335 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு தனது பங்களிப்பின் ஒரு பகுதியை ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய இணைப்பு
இந்த 15.46 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடத்தில், 13 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இது விமான நிலையம், தாம்பரம், குரோம்பேட்டை வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும். மேலும், இந்த திட்டம் இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ ரயில் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்திற்கு மேலே மெட்ரோ ரயில்
இது ஜிஎஸ்டி சாலையில் வாகனப் போக்குவரத்திற்கான மேம்பாலத்திற்கு மேலே மெட்ரோ ரயில் பாதையை அமைக்கும். இதன் மூலம் தென் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.