- Home
- Tamil Nadu News
- 10, 11ம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வுகள் எப்போது? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வுகள் எப்போது? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 10ம் வகுப்பில் 93.80% மற்றும் 11ம் வகுப்பில் 92.09% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு வெளியிட்டார். இதில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 92.09 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் 93.80 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டை விட இந்தாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகம்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8,71, 239 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 93.80 சதவீதமாகும். வழக்கம்போல் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிக தேர்ச்சியை பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட இந்தாண்டில் தேர்ச்சி விகிதம் 2.25 சதவீதம் அதிகம். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதத்துடன் சிவகங்கை முதலிடத்திலும், 95.57 சதவீதத்துடன் விருதுநகர் 2வது இடத்திலும், 95.47 சதவீதத்துடன் கன்னியாகுமரி 3வது இடத்திலும், 95.42 சதவீதத்துடன் திருச்சி 4வது இடத்திலும், 95.40 சதவீதத்துடன் தூத்துக்குடி 5வது இடத்திலும் உள்ளது.
துணைத்தேர்வு எப்போது?
இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 6.20 சதவிகித மாணவர்களும், 11ம் வகுப்பில் 8.81 சதவிகித மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களுக்கான துணைத் தேர்வு எப்போது நடைபெற உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதில் 10, 11ம் வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூலை 4ம் தேதி முதல் நடைபெறும். இதற்கான அட்டவணை நாளை வெளியிடப்படும். துணைத்தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு அந்தந்த பள்ளிகளை அணுகி மாணவர்கள் எளிதாக துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பெற்றோரும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அதனை நினைத்துக் கவலைப்பட வேண்டியது இல்லை. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் மனநிலை மிகவும் மோசமான நிலையில் இருக்கும். அவர்களைப் பெற்றோரும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து தான் மீட்டுக் கொண்டு வந்து சிறப்பு தேர்வு எழுத வைக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.