திருவண்ணாமலை போறீங்களா?.. பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!
Tiruvannamalai Pournami Girivalam Special Trains 2025: திருவண்ணாமலை கிரிவலத்தையொட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

திருவண்ணாமலை கோயில்
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்ச்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு பௌர்ணமி நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை மனமுருகி வழிபாடு செய்து விட்டு திரும்புகின்றனர்.
திருவண்ணாமலை கிரிவலம்
இந்நிலையில், திருவண்ணாமலையில் அக்டோபர் மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருவண்ணாமலைக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலத்தையொட்டி விழுப்புரம், திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: அக்டோபர் 6, 2025 அன்று பௌர்ணமி/கிரிவலம் காரணமாக, பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே தலா 8 பெட்டிகள் கொண்ட இரண்டு மெமு (MEMU) சிறப்பு ரயில்கள் (தேவையின் அடிப்படையில் இயக்கப்படும்) இயக்கப்பட உள்ளன.
ரயில் புறப்படும் நேரம் என்ன?
ரயில் எண் 06130 விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.45 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கமாக, ரயில் எண் 06129 திருவண்ணாமலையிலிருந்து இரவு 12.40 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 04.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் வெங்கடேசபுரம், கண்டம்பாக்கம், அயிலூர், திருவக்கரையூர், அடுக்கஞ்சேரி, அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.