ரேஷன் கார்டில் அப்டேட் செய்து விட்டீர்களா.? ஈசியாக பதிவு செய்ய வெளியான கடைசி சான்ஸ்
அரசு வழங்கும் உணவுப் பொருட்கள் சரியான மக்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய, ரேஷன் கார்டில் KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலியான ரேஷன் கார்டுகளைக் கண்டறிந்து, உண்மையான பயனாளிகளுக்கு உதவிகள் சென்றடைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும்.
மானிய விலையில் உணவு பொருட்கள்
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உணவு பொருட்களை நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதன் படி
அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. மாநிலங்களுக்கு ஏற்ப உணவு பொருட்கள் வழங்கப்படுவது மாறுபடும்.
இந்த நிலையில் அரசின் சார்பாக வழங்கப்படும் உணவு பொருட்கள் சரியான மக்களை சென்றடைகிறதா என அரசின் சார்பாக ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் ஒரு சிலர் பல பெயர்களில் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதும், கள்ள சந்தையில் உணவுகளை விற்பதும் தெரிய வந்தது. மேலும் அரசு ஊழியர்களும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு பொருட்களை பெற்று வருவதும் கண்டறியப்பட்டது.
போலியான ரேஷன் கார்டுகள்
இதனால் ஏழை , எளிய மக்களுக்கு அரசின் உதவிகள் சரவர கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிய ரேஷன் கார்டில் Know Your Customer (KYC)-ஐ மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அந்த வகையில் ஆதார் எண், மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அல்லது ரேஷன்கடைகளில் நேரடியாக சமர்பிக்கலாம்.
தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயணாளிகள் உணவுப்பொருட்கள் வாங்குகின்றனர். இந்த குடும்ப அட்டை மூலம் தமிழக அரசு சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ள நிவாரணமும் வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டு- கேஒய்சி அப்டேட்
இந்தநிலையில் ஒருரேஷன் கார்டில் எத்தனை பெயர்கள் இருந்தாலும் அவர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட தகவல்களை ஆவணமாக சமர்பிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு சார்பாக பல முறை காலஅவகாசம் வழங்கப்பட்டது. ரேஷன் கார்டு கேஒய்சிக்கான பதிவு செய்வதற்கான கடைசி தேதியாக அக்டோபர் 31 ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் பேர் தங்களது ஆவணங்களை சமர்பித்து சரிபார்த்தனர். இருந்த போதும் பல மாநிலங்களில் இன்னும் முழுமையாக அப்டேட் செய்யாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு டிசம்பர் 1ஆம் தேதி வரை கேஒய்சி அப்டேட் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டது.
ஆன்லைனில் அப்டேட்
இந்த கால அவகாசம் தான் கடைசி எனவும், ஆதார் கார்டு உள்ளிட்ட தகவல்களை கொடுத்து ரேஷன் கார்டு கேஒய்சி அப்டேட் செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் மூலமும் அப்டேட் செய்யலாம் அந்த வகையில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ரேஷன் கார்டு நிலை என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்தாக குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போது தங்களது ரேஷன் கார்டு உபயோகத்தில் இருந்தால் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக பதிவு காட்டும்.
இ சேவை மையம்- ரேஷன் கடையில் அப்டேட்
இல்லையென்றால் ஆதார் இணைக்கப்படவில்லையென திரையில் காட்டும். அதனை கிளிக் செய்து ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டும். இதனை தொடர்ந்து வெற்றிகரமாக கேஒய்சி பதிவு செய்யப்பட்டதாக காட்டும். ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாதவர்கள் அருகில் இருக்கும் அரசு இசேவை மையங்களுக்கு சென்றோ அல்லது தங்கள் உணவு பொருட்களை வாங்கும் ரேஷன் கடைக்கு சென்றோ கேஓய்சி அப்டேட் செய்து கொள்ளலாம்.