- Home
- Tamil Nadu News
- TN SCHOOL : கெத்து காட்டும் அரசு பள்ளிகள்.! கொத்து கொத்தாக சேரும் மாணவர்கள்-வெளியான சூப்பர் தகவல்
TN SCHOOL : கெத்து காட்டும் அரசு பள்ளிகள்.! கொத்து கொத்தாக சேரும் மாணவர்கள்-வெளியான சூப்பர் தகவல்
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகள் மற்றும் தரமான கல்வி வசதிகள் காரணமாக பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி திரும்பி வருகின்றனர்.

போட்டி போடும் அரசு பள்ளிகள்
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளுக்கும் போட்டி போட்டி வருகிறது. பொதுத்தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட அரசு பள்ளியில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதித்து வருகிறார்கள். தனியார் பள்ளியில் பல லட்சம் ரூபாய் கட்டி சிறப்பு பயிற்சி மூலம் எடுக்கும் மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை வாங்கி குவிக்கிறார்கள் அரசு பள்ளி மாணவர்கள்.
எனவே பெற்றோர்களின் பார்வை நாளுக்கு நாள் அரசு பள்ளிகளின் மீது திரும்பியுள்ளது. இதனால் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளும், திட்டங்களையும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள்
அந்த வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன மாணவர்களுக்கு இலவச சீருடை 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 ஜோடி சீருடைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மதிய உணவு திட்டத்தின் மூலம் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு தரமான மிதி வண்டியும் வழங்கப்பட்டு வருகிறது. 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகப்பைகள். கணித உபகரணப்பெட்டி, வண்ணப் பென்சில்கள் மற்றும் கிரையான்கள் வழங்கப்படுகிறது
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
இது மட்டுமில்லாமல் தமிழக அரசு சார்பாக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு கட்டண விலக்கு மற்றும் உதவித்தொகையும் செயல்படுத்தப்படுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் உண்டு உறைவிட வசதி வழங்கப்பட்டு வருகிறது. வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக டிஜிட்டல் கல்விக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், கல்வி டிவி, மற்றும் ICT ஆய்வகங்கள் போன்ற சிறப்பு அம்சங்களும் அரசு பள்ளிகளில் இடம்பெற்றுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு
மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாயும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ மற்றும் தொழில்முறை படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வங்கப்படுகிறது. மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் பங்கேற்க சிறப்பு வகுப்புகள் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் மருத்துவர் கனவு நினைவாகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின் பார்வை அரசு பள்ளிகளின் மீது திரும்பியுள்ளது.
3 லட்சத்தை தாண்டிய அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை
இது தொடர்பாக தமிழக அரசின் துவக்கப்பள்ளி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பில் நடப்பாண்டில் பாலர் பள்ளியில் 22 ஆயிரத்து 757 பேரும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் மீடியத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 676 பேரும், ஒன்றாம் வகுப்பு ஆங்கில மீடியத்தில் 52057 பேரும், இரண்டாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை 65 ஆயிரத்து 391 பேரும் ஆக மொத்தம் நேற்றைய தினம் வரை மூன்று லட்சத்து 12 ஆயிரத்து 881 பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 17,985 மாணவ மாணவிகளும் செங்கல்பட்டில் 9528 மாணவ மாணவிகளும்,
திருப்பூரில் 9385 மாணவ மாணவிகளும், சேலத்தில் 8573 மாணவ மாணவிகளும், தென்காசியில் அதிகபட்சமாக 8019 மாணவ மாணவிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிகவும் குறைந்த அளவாக ஒட்டன்சத்திரம் தேனி கோவில்பட்டி தாராபுரம் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவு மாணவர்களே அரசு பள்ளியில் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 3 லட்சத்தை மாணவர்கள் சேர்க்கை தாண்டியுள்ள நிலையில ஆகஸ்ட் மாதத்திற்குள் மேலும் ஒரு லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.