Chennai Water : இலவசமாக குடிநீர் ஏடிஎம்.! அசத்தலான திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
தமிழக அரசு, மக்களுக்கு சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்கும் நோக்கில், சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை அமைத்துள்ளது. இந்த ஏடிஎம்கள் மூலம் 150 மி.லி மற்றும் 1 லிட்டர் அளவுகளில் குடிநீர் வழங்கப்படுகிறது,

தண்ணீர் தேவை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ளவும், வாழ்க்கையின் அடிப்படை தேவையாக பெரிதும் உதவியாக இருப்பது குடிநீர். குடிநீர் மனித வாழ்விற்கு மிக அவசியமானது. உடலில் நீரிழப்பைத் தடுக்க குடிநீர் அவசியம். ஒரு நாளைக்கு சராசரியாக 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. செரிமானம், உடல் வெப்பநிலை கட்டுப்பாடு, மூட்டுகளுக்கு லூப்ரிகேஷன் மற்றும் ஊட்டச்சத்து பரவுதல் ஆகியவற்றுக்கு உதவுகிறது.
குடிநீர் சுத்தமாகவும், பாக்டீரியா, வைரஸ், மாசு மற்றும் இரசாயனங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். RO, UV வடிகட்டிகள் அல்லது கொதிக்க வைத்த நீர் பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஆனால் ஏழை எளிய மக்களால் குடிநீர் குழாய்களில் வருகின்ற தண்ணீரை மட்டுமே குடிக்க முடிகிறது.
தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாத மக்கள்
கடைகளில் விலை கொடுத்து வாங்கி குடிக்க முடியாத நிலை தான் நீடித்து வருகிறது. வேலைக்காக வெளியில் செல்லும் நபர்கள் தெரு ஓரங்களில் கிடைக்கும் தண்ணீரை குடிக்கும் நிலை உள்ளது. அதில் எந்த அளவிற்கு தூய்மையாக இருக்கும் என கணிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. எனவே கடைகளில் ஒரு பாட்டில் 20 முதல் 30 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்க முடியாத மக்களும் உள்ளனர். அவர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு சார்பாக குடிநீர் ஏடிஎம் அமைக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக சென்னை மாநகாராட்சி பகுயில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.6.2025) சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 6.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி விதமாக, சென்னை, மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகில் அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்து, குடிநீரை அருந்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் வாயிலாக நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் 50 இடங்களில் இலவச குடிநீர்
சென்னையில் 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் இந்த ஏடிஎம்கள் இயங்குகின்றன. தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு உபகரணங்களின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.
இவை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் 150 மி.லி. மற்றும் 1 லிட்டர் அளவுகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஏடிஎம்கள் மூலம் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை மக்கள் எளிதாகப் பெறலாம். இத்திட்டம் மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை உறுதி செய்வதுடன், பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
தூய்மையான தண்ணீரை வழங்க பாதுகாப்பு அம்சங்கள்
குடிநீர் விநியோக குழாயிலிருந்து 3,000 லிட்டர் முதல் 9,000 லிட்டர் கொள்ளளவுள்ள கொண்ட HDPE சின்டெக்ஸ் டேங்குகளில் குடிநீர் சேகரிக்கப்பட்டு, அல்ட்ரா வடிகட்டிகள், கார்பன் வடிகட்டிகள் மற்றும் புறஊதாக் கதிர் மூலம் சுத்திகரிக்கப்பட்டு துருப்பிடிக்காத சில்வர் டேங்குகளில் சேகரிக்கப்பட்டு தானியங்கி இயந்திரங்கள் மூலம் பொதுமக்கள் 1 லிட்டர் மற்றும் 150 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதுகாப்பான குடிநீர் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி இயந்திரங்கள் அனைத்தும் நவீன IoT (Internet of Things) மூலம் இயக்குதல் மற்றும் பராமரிப்பு செயல் முறையை இணைய அடிப்படையிலான செயலி மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் குடிநீர் அளவு குறையும் போது உடனடியாக பகுதி பொறியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான குடிநீர் நிரப்ப நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். திருட்டு மற்றும் சமூக விரோதிகள் மூலமாக குடிநீர் இயந்திரங்கள் சேதப்படுத்தபடுவதை தடுக்க அனைத்து நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன்மூலம் பொது மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
தமிழகத்தில் விரைவில் குடிநீர் ஏடிஎம்
தொழில்நுட்ப அம்சங்கள்:
இந்த குடிநீர் ஏடிஎம்கள் RO (Reverse Osmosis) மற்றும் UV (Ultraviolet) சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி, உயர் தரமான குடிநீரை உறுதி செய்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு ஏடிஎம் மூலம் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் சொந்த குடிநீர் பாத்திரங்களைப் பயன்படுத்தி தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். இதன் காரணமாக பிளாஸ்டிக் கழிவுகள் குறைகின்றன.
பயன்கள்:
சுகாதாரமான குடிநீர்:
பொதுமக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்கள், சுத்தமான குடிநீரை இலவசமாகப் பெறுவதால், நீர் மூலம் பரவும் நோய்கள் குறைகின்றன.
குடிநீர் தரம் BIS (Bureau of Indian Standards) அளவுகோல்களுக்கு ஏற்ப உள்ளது.
மக்கள் தங்கள் சொந்த குடிநீர் பாத்திரங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவு குறைகிறது.
பொது இடங்களில் குடிநீர் கிடைப்பது பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.எதிர்காலத்தில் இத்திட்டத்தை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது, குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் சந்தைகளில். இந்த ஏடிஎம்கள் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு, தானியங்கி முறையில் சுத்தமான குடிநீரை வழங்கப்படவுள்ளது. சூரிய ஒளி மூலம் இயங்கும் குடிநீர் ஏடிஎம்களை அறிமுகப்படுத்துவதற்கு ஆலோசனைகள் நடைபெறுகின்றன, இதனால் மின்சார செலவு குறையும் எனவும் கூறப்படுகிறது.