அழுத்தத்திற்கு பணிய நான் பலவீனமானவன் அல்ல - விஜய்க்கு திருமா அதிரடி பதில்
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்துள்ளார் என்பது உண்மை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன், ஆதவ் அர்ஜூனா
“எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் (Vijay) கலந்து கொண்டு பேசினார். அப்போது திருமாவளவன் இந்த கூட்டத்தில் பங்கேற்காத வகையில் கூட்டணிக்கட்சிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். விழாவில் பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) “தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒருவர் தமிழகத்தில் முதல்வராக வரக்கூடாது. சகோதரர் விஜய் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக பேச வேண்டும்” என்று பேசினார். இந்த கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் (Thirumavalavan) பேசுகையில், எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலை விஜய் வெளியிட்டது வரபேற்புக்குரியது. இந்த விழாவில் நான் பங்கேற்காமல் போனதற்கு திமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளின் அழுத்தமும் தான் காரணம் என்ற தொணியில் விஜய் பேசியுள்ளார். அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. விழாவில் பங்கேற்காதது நான் சுயமாக எடுத்த முடிவு.
திருமாவளவன், விஜய்
கூட்டணிக்கட்சிகளின் அழுத்தத்திற்கு இணங்கும் அளவிற்கு நானோ, விசிக.வோ பலவீனமாக இல்லை. நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளாமல் போனதற்கு விஜய் காரணம் கிடையாது. அவருக்கும், எங்களுக்கும் எந்தவித சிக்கலும் கிடையாது. ஆனால், அவரும், நாங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகிறோம் என்று அதிகாரப்பூர்வமில்லாமல் செய்தி வெளியானபோதே அதற்கு அரசியல் சாயம் பூசியவர்கள் யார் என்பதை ஆராந்து பார்க்க வேண்டும்.
திருமாவளவன், ஆதவ் அர்ஜூனா
அதன் அடிப்படையில் தான் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்ற முடிவை நான் சுயமாக எடுத்துள்ளேன். விசிக.வின் துணைப்பொதுச்செயலாளராகவே இருந்தாலும் ஆதவ் அர்ஜூனா பேசியது அனைத்தும் அவரது சொந்த கருத்துகளே. கட்சியின் கருத்தல்ல. திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது உண்மை தான். இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும். கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்து அடுத்துக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.