விஜய் கூட ஒன்றாக மேடை ஏறாதது ஏன்.? இது தான் காரணம்- உண்மையை போட்டுடைத்த திருமாவளன்
Vijay vs Thirumavalavan : நடிகர் விஜய் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்க இருந்த நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்கவில்லை. என்ன காரணம் என திருமாவளவன் விளக்கியுள்ளார்.
Thirumavalavan VCK
" எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆகிய இருவரும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் தவெக கூட்டணியில் திருமாவளவன் இணைய இருப்பதாக தகவல் பரவியது.
இந்த நிலையில் திடீரென புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் இருந்து திருமாவளவன் விலகினார். இது தொடர்பாக திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,நடிகர் விஜய் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
Thirumavalavan politics
அதன்பின்னர், ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான்.
அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன் பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது? திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும்.
thirumavalavan vs Vijay
"திமுகவைத் தனது அரசியல் எதிரி என வெளிப்படையாகப் பேசியும், 'திராவிட முன்மாதிரி அரசு' என்பதைக் கடுமையாக விமர்சித்தும் தனது மாநாட்டில் உரையாற்றியுள்ள விஜய் அவர்களோடு, உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள் " -என திமுக தொண்டர்களுக்குச் செய்தி சொல்வதும்; அதனடிப்படையில் என்மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கமென்பது "வெள்ளிடை மலையென" வெளிப்படுகிறது.
அடுத்து, இந்த விழாவில் பங்கேற்க நான் ஓராண்டுக்கு முன்னரே இசைவளித்துவிட்டேன். விஜய் அவர்களின் மாநாட்டு உரைக்கு முன்னர், அவர் வருவதை அறிந்த போதும்கூட அந்நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். ஆனால், அவரது மாநாட்டு உரைக்குப் பின்னர், 'அவர் நூல் வெளியீட்டு விழா மேடையில் என்ன பேசுவோரோ' என்கிற அச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன்.
thirumavalavan vs Stalin
அப்போது, "அவர் துளியும் அரசியல் பேசமாட்டாரென" விகடன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்பின்னர் தான், அந்த நாளேடு இப்படியொரு தலைப்புச் செய்தியை வெளியிட்டுச் சமூக ஊடகங்களுக்குத் தீனி போட்டது. 'வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக' இன்று வரையிலும் பலபேர் அதனை அசைபோட்டுக் கொண்டே உள்ளனர்.
அந்த நாளேட்டின் சதி அரசியல், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அவர் இனிமேல் தான் கூட்டணி அமைக்கப் போகிறார். ஆனால், விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது.
BJP vs VCK
திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன்மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும் கொண்டு செயலாற்றி வருகிறது. இந்நிலையில், அந்த நாளேட்டின் உள்நோக்கத்தையும் அத்தகைய சக்திகளின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை விசிக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகியது.
யார் என்ன சொன்னாலும் அதனைப் பொருட்படுத்தாமல் விஜய் அவர்களோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா? அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே; அதனை அவர் புறக்கணிக்கலாமா? திரையுலகின் சாதனையாளராகப் புகழ்பெற்ற கவர்ச்சிமிகு கதாநாயகர் விஜய் அவர்களோடு மேடை ஏறுவதற்கு கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பை அவர் நழுவ விடலாமா?
Actor Vijay Politics
அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு ? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா? வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா?
திமுக அவரை அச்சுறுத்துகிறதா? அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா? திமுக கூட்டணியை விட்டு வெளியேற அவரை எது தடுக்கிறது? இவ்வாறு சிலர் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பல்வேறு ஊகங்களை ஊடகங்களில் அள்ளி இறைத்து நம்மை வறுத்தெடுக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள்.
dmk vs vck
இவர்களில் யாரும், விகடன் பதிப்பகம் ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது?- என்கிற கேள்வியை எழுப்பவில்லை. "விஜய் போதும்; திருமா தேவையில்லை " என்கிற முடிவை விகடனால் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? -என்று எவரும் அலசவில்லை.விஜய் வருத்தப்பட்டு விடக்கூடாது; திருமா வருத்தப்பட்டாலும் வருத்தப்படட்டும் என எப்படி அவர்களால் இலகுவாக நகர முடிந்தது? - என்று கேள்வி எழுப்பவும் இங்கே எவருக்கும் துணிச்சல் இல்லை.
Vijay politics
இதனை ஒரு வாதத்திற்காகத் தான் நான் முன் வைக்கிறேன். விகடன் இப்படி முடிவெடுப்பதற்கு நானும் தான் காரணம். " விஜய் அவர்கள் வேண்டாம் அவரைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஒருபோதும் கூறமாட்டேன்; உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்கமாட்டேன். அவரை வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள் " என்று விகடன் பதிப்பகத்தாரிடம் அந்த நாளேட்டுச் செய்தியைக் கண்டதுமே நான் கூறிவிட்டேன்.
'விஜய் அவர்களைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்' என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும். இந்நிலையில், நான் அவ்வாறு கூறியதன் அடிப்படையில் தான், அவர்களால் அந்த முடிவை குற்ற உணர்வின்றி எடுக்க முடிந்தது என்றும் நான் நம்புகிறேன். விஜய் அவர்களை மிகப்பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு "துக்கடா" வாகவும் எடைபோடுகிறவர்களால் எவ்வாறு நமக்காக வாதிட முடியும்?
VCK Vijay
"தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும்" என திருமாவளவன் பெருந்தன்மையோடு ஒதுங்கியிருக்கிறார் என்று பேசுவதற்கு இங்கே யாருண்டு? "அவருக்கு நெருக்கடி வேண்டாம்; அவரைத் தவிர்க்கவும் வேண்டாம்; அவரை வைத்தே நிகழ்வை நடத்துங்கள் - என்று விஜய் அவர்கள் கூட விகடனுக்குச் சொல்லியிருக்கலாமே " -எனப் பேசுகிற துணிச்சல் இங்கே யாருக்குண்டு?
" மாறாக, முகம் சுளிக்கும் மொழியில், மூக்கைப் பிடிக்கும் நடையில், நரகல் சொற்களை நாவால் அள்ளி நம்மீதே வீசுகின்றனர். "ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா; அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் " என்று சொல்லுகிற அதே நபர்கள் தாம்,-- "திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார் " என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர்.
thirumavalavan
ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? அதேபோல, திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? ஆனால், அப்படியெல்லாம் அவர்களில் யாரும் இங்கே சிந்திக்கமாட்டார்கள்.
மாறாக, விஜயோடு நிற்பது தனக்குப் பெருமையென கருதி திருமாவளவன் மேடைக்கு வருவார் என்றும்; அல்லது தேர்தலில் போட்டியிடக் கூடுதல் இடங்கள், அதிகாரப்பகிர்வு என ஆசைப்பட்டு திருமாவளவன் விஜய் அவர்களோடு கைகோர்ப்பார் என்றும்; அல்லது அதே வேட்கையோடு திமுக கூட்டணியை விட்டு வெளியேறி அதிமுகவோடு இணைவார் என்றும் தான், அவர்கள் நம்மைப் பற்றி கணக்குப் போடுகிறார்கள். இதுதான் நம்மைப் பற்றிய அவர்களின் மதிப்பீடு!
Actor vijay and Thirumavalavan
அது நிறைவேறவில்லை என்றதும் தான், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர். அவை, 'தங்களின் செயல்திட்டத்தைத் திருமாவளவன் நொறுக்கிவிட்டானே' என்று ஆதங்கப்படுவோர் அள்ளி வீசும் அமில வசவுகள்.அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போல கடந்து செல்வோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்