திமுக கூட்டணி கணக்குகள் அனைத்தையும் மக்களே மைனஸாக்கி விடுவாங்கள்! திருமாவை விட்டு கொடுக்காத விஜய்!
சட்ட மேதை அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். ஜனநாயக உரிமைகள், தேர்தல் ஆணையர் நியமனம், மணிப்பூர் விவகாரம், வேங்கைவயல் பிரச்சினை குறித்து விஜய் கருத்து தெரிவித்தார்.
Ambedkar Book Release
சட்ட மேதை அம்பேத்கரின் 68ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே மற்றும் ஓய்வு பெற்ற பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டனர்.
Thirumavalavan
இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. விஜய்யுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தேவையில்லாத விவாதங்கள் ஏற்படும் என்பதால் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்யை மேடையிலே வச்சிக்கிட்டு திமுகவை இப்படி சொல்லிட்டாரே? உதயநிதியை விட்டு வைக்காத ஆதவ் அர்ஜுனா!
Vijay
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய்: ஜனநாயகத்தின் ஆணிவேர் நியாயமான தேர்தல். சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதாக மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். அதற்கு ஒருமித்த கருத்துடன் தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலிமையான கோரிக்கை. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்பது என்னுடைய மற்றொரு கோரிக்கை. இதனை நான் மத்திய அரசிடம் முன்வைக்கிறேன்.
MK Stalin
இன்றைக்கும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியும். அதை கண்டுகொள்ளாமல் ஓர் அரசு மேலிருந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கிறது. அங்குதான் அப்படி என்றால் இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது. சமூக நீதி பேசும் இங்கிருக்கும் அரசு, வேங்கைவயல் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு ட்வீட் போடுவது மட்டும அரசியல் அல்ல. சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று போட்டோ எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களுடன் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்கு சில நேரங்களில் அப்படி செய்யவேண்டியுள்ளது.
TVK Vijay
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கான அடிப்படை சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களின் சுயநலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ம் மக்களே மைனஸாக்கி விடுவார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும் என விஜய் பேசினார்.