- Home
- Tamil Nadu News
- அன்று அம்மா.! இன்று விஜய்.! விசுவாசத்திற்கு அங்கீகாரம்! புகழ்ந்து தள்ளிய ஜெ.நிழல்!
அன்று அம்மா.! இன்று விஜய்.! விசுவாசத்திற்கு அங்கீகாரம்! புகழ்ந்து தள்ளிய ஜெ.நிழல்!
TVK Vijay Vs Jayalalitha: ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன், தவெக தலைவர் விஜய் தனது கார் ஓட்டுநரின் மகனை கொறடாவாக நியமித்ததை பாராட்டியுள்ளார். சாமானியர்களை உயர்த்தி அழகு பார்க்கும் ஜெயலலிதாவின் பாணியை விஜய் கையில் எடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் கார் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். வெற்றி பெற்ற அவருக்கு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக சபரிநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புரட்சித்தலைவி அம்மா எங்களைப் போன்ற சாமானியர்களை உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். இன்று அதே பாணியை விஜய் கையில் எடுத்துள்ளார் என பூங்குன்றன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அவரது முகநூல் பக்கத்தில்: உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் உரிய அங்கீகாரம் என்பது இன்று அரிதாகி வரும் சூழலில், முதலமைச்சர் தனது ஓட்டுநர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காட்டும் பேரன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. புரட்சித்தலைவி அம்மாவின் நிழலில் சுமார் 19 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு தலைவன் என்பவன் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தோள்களை எப்போதுமே கைவிடக்கூடாது. அந்தப் பண்பு தமிழக முதலமைச்சரிடம் முழுமையாக இருப்பதை இன்று பார்க்கிறேன்.
நமது அரசியல் களத்தில் இப்போதும் ஒரு குறுகிய மனப்போக்கு இருப்பதை நான் காண்கிறேன். 'அவர் வெறும் வேலைக்காரர் தானே, சம்பளம் வாங்குபவர் தானே?' என்று ஏளனம் செய்பவர்கள் உண்டு. நான் கட்சியின் நலனுக்காக பதிவுகள் போடும்போது கூட பலர் இவருக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டதுண்டு. இவர் அம்மாவிடம் வேலை செய்தார். சம்பளம் வாங்கினார் அவ்வளவுதான். அவர் வேலையை பார்க்க வேண்டியதுதானே என்று சொன்ன அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.
என்னிடம் வந்து இவர்கள் காத்திருந்த நாட்களை மறந்து போனதுதான் வேதனை. ஆனால், 24 மணிநேரமும் ஒரு தலைவருக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் ஒரு உதவியாளரின் தியாகம், அந்தப் பதவி சுகத்தை அனுபவிப்பவர்களுக்குத் தெரிவதில்லை. புரட்சித்தலைவி அம்மா எங்களைப் போன்ற சாமானியர்களை உயரத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். இன்று அதே பாணியில், தன் ஓட்டுநர் ராஜேந்திரனின் மகனை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்றக் கொறடாவாகவும் உயர்த்திப் பிடித்திருக்கும் விஜய்யின் பெருந்தன்மை மகத்தானது.
ஜோதிடர் ரதன் பண்டிட் அவர்களுக்கு 'ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டூட்டி' பதவி வழங்கப்பட்டபோது எழுந்த விமர்சனங்களால் அது திரும்பப் பெறப்பட்டது எனக்கு வருத்தமே..! படிக்காத மேதைகள் முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து நாட்டுக்கு நன்மைகளைச் செய்த வரலாறு நமக்கு உண்டு. அப்படி இருக்கையில், படித்த ஒரு ஜோதிடர் அந்தப் பதவியில் இருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? மக்களுக்கு நல்லது செய்யத் தேவையானது தூய்மையான மனம் தான், வெறும் கல்விச் சான்றிதழ்கள் அல்ல.
தன்னை நம்பியவர்களைத் தன்னோடு சேர்த்து உயர்த்திப் பார்க்கும் அந்தப் பண்பு இருக்கிறதே... அதுதான் ஒரு உண்மையான தலைவனுக்கான அடையாளம்! யார் என்ன சொன்னாலும், தனக்காக உழைத்தவர்களுக்கு உரிய மரியாதையைத் தேடித்தரும் இந்தத் குணம் தான் ஒரு தலைவனை மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைக்கும். உதவியாளரை உடன் பிறவா சகோதரராக பாவித்து, அவருக்கு உயர்வுகளை அள்ளித் தரும் இந்த நல்ல எண்ணமே முதலமைச்சருக்கு ஒரு 'பாதுகாப்புக் கவசமாக' இருந்து, அவரை எல்லாச் சூழலிலும் காக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

