பெண்களுக்கு குஷியான அறிவிப்பு.! 3 லட்சத்தை சுழல் நிதியாக அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு- வெளியான உத்தரவு
தமிழக அரசு சார்பாக மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சுய தொழில் தொடங்க 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது. இதற்காக 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை முதல் மகளிர் சொந்த தொழில் செய்வதற்காகவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுய தொழில் செய்வதற்காக 2.22 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமுதாய ரீதியாக வலுப்படுத்திடும் வகையில்,
சுய உதவிக்குழு - சுழல் நிதி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நவீன தொழில்களில் பயிற்சி அளித்து, அத்தொழிலை துவங்குவதற்குத் தேவையான நிதி உதவியினையும் வழங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்குத் தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி. உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கிடும் வகையில், 2.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் ஒரு சிறப்புத் திட்டத்தின தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தேனீ வளர்ப்பினை சுய உதவிக் குழுவினரிடையே ஊக்குவிக்கும் வகையில்,
தேனீ வளர்ப்பிற்கு பயிற்சி- நிதி ஒதுக்கீடு
ஒவ்வொரு தேனீ வளர்ப்புத் தொகுப்பிற்கும் ரூ.3 இலட்சம் சுழல் நிதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மகளிர் கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தேனீ பெட்டிகள் வீதம் மொத்தம் 100 தேனீப் பெட்டிகள் வாங்குவதற்காக ரூ.1.5 இலட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம், புகைமூட்டி, தேனீ பிரஷ், தேன் பிரித்தெடுக்கும் கருவி போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
3 லட்சம் ரூபாய் சுழல் நிதி
மேலும் தேன் சுத்திகரிப்பு, பதப்படுத்தும் இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.15 இலட்சமும், இவ்வியந்திரங்களை நிறுவுவதற்கு 11 ஆயிரம் ரூபாயும். தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சிக்கு 4 ஆயிரம் ரூபாயும் என ஒவ்வொரு தொகுப்புக்கும் மொத்தமாக 3 இலட்சம் ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து பயனாளிகளுக்கும் தேவையான தேனீப் பெட்டிகளை தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் தரமான நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.
தேனீக்கள் மூலம் வருமானம்
தமிழ்நாட்டில் 1480 சுய உதவிக் குழு மகளிர் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ரூ.2.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீ வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களை சுய உதவிக் குழு மகளிர் நன்கு தெரிந்து கொண்டு, அதன் மூலம் தேன் மட்டுமல்லாது, தேன் மகரந்தம். ராயல் ஜெல்லி, தேன் மெழுகு போன்ற தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் துணைப் பொருட்களையும் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட இயலும் என் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.