- Home
- Tamil Nadu News
- ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு.. பார்ப்பது எப்படி? சான்றிதழ் எப்போது பெறலாம்?
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு.. பார்ப்பது எப்படி? சான்றிதழ் எப்போது பெறலாம்?
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ்களை TRB இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆசிரியர் தகுதி தேர்வு
இந்தியாவில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. தமிழ்நாட்டில் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. இரண்டு தாள்கள் கொண்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை இரண்டாம் தாளும் நடத்தப்படுகிறது.
மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதினர்
150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 90 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் 82 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 367 மையங்களில் நவம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 92, 412 பேர் தேர்வு எழுதினர் அதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் II நவம்பர் 16ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 3,31,923 பேர் எழுதினர். மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர்.
தகுதித்தேர்வு கட்டாயம்
அதற்கும் முன்னதாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. தகுதித்தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்வு இது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து ஜனவரி 28ம் தேதி அரசாணை வெளியிட்டது.
குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்
அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம், சீர்மரபினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள், எஸ்சி, எஸ்சி அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினருக்கு 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள், பொதுப் பிரிவினருக்கு 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் ஒன்றுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில் வெளியாகியுள்ளன.
ஆசிரியர் தேர்வு முடிவுகள்
இதுதொடர்டபாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: 2025ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் – I நவம்பர் 15 அன்றும் தாள் – II 16ம் தேதியன்றும் நடத்தப்பட்டது. தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் நவம்பர் 25ம் தேதியன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது.
தற்காலிக விடைக்குறிப்பிற்கு நவம்பர் 25 முதல் டிசம்பர் 03ம் தேதி பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் பாட வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.
சான்றிதழ் எப்போது பெறலாம்?
அரசாணை (நிலை) எண் 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை, நாள் ஜனவரி 28ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதிபெற்ற தேர்வர்களுக்கு பிப்ரவரி 02ம் தேதி முதல் அவர்களது தகுதிச்சான்றிதழ் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

