நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்.. என்ன காரணம்? பேரதிர்ச்சியில் குடிமகன்கள்.!
TASMAC:வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பிப்ரவரி 1ம் தேதியான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் டாஸ்மாக்
தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கொட்டி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் துறை இருந்து வருகிறது. இது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் செயல்படுகிறது. அதாவது தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தினமும் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும்.
பொங்கல் பண்டிக்கைக்கு 850 கோடி வருவாய்
அந்த வகையில கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது. குறிப்பாக நகரப் பகுதிகளை காட்டிலும் கிராமப்புறங்களில் மது விற்பனை கணிசமாக கூடியது. இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் இருந்து மக்கள் கிராமங்களில் பொங்கல் கொண்டாட சென்றது தான். நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதன் வருமானமும் உச்சத்தை எட்டி வருகிறது.
டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் விடுமுறை
பண்டிகை காலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறையே இல்லை. எனவே ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளூர் தினம், குடியரசு தின விழா, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மிலாது நபி, காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1ம் தேதி விடுமுறை
இதனிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் கோயில், மசூதி, தேவாலய விழாக்களின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி மதுபானம் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடலூர் ராமலிங்கர் நினைவு தினம்
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வருகிற 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மது விற்பனை செய்தால் நடவடிக்கை
மேலும் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

