Registration Office: அடேங்கப்பா! டாஸ்மாக் வருமானத்தை மிஞ்சியதா பதிவுத்துறை வருவாய்! எத்தனை கோடி தெரியுமா?
தமிழக பத்திரப்பதிவுத்துறையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.1222 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் ரூ.11733 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை கிள்ளிக்கொடுக்காமல், அளிக்கொடுக்கும் துறையாக இருப்பது டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவுதுறை ஆகிய இரண்டு துறைகளாகும். குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 120 கோடி அளவிற்கு மது விற்பனையாகிறது. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் 200 கோடியை மிஞ்சும். வருடத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும் மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் பத்திரப்பதிவுத்துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.1222 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: TMB Bank Recruitment 2024: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை! சம்பளம் எவ்வளவு கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டத்தில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பதிவுத்துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.10511 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டில் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.11733 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.1222 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Chennai Heavy Rain: இன்று 20 செ.மீ மழை இருக்காம்! ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை மக்களை அலறவிடும் வானிலை மையம்!
ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான வருகின்ற 14.11.2024(வியாழன்) மற்றும் 15.11.2024(வெள்ளி) ஆகிய தினங்களில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன் பதிவு வில்லைகளும், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக வழங்கிட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் அவர்கள், பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல் (களப்பணி மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களை தவிர்த்து), ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தெரிவு செய்தல், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவிற்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், உள்ளிட்ட பணிகளின் விவரங்களை கேட்டறிந்து, அனைத்து பணிகளையும் தொய்வில்லாமல் உடனுக்குடன் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.