டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்.! அள்ளிக் கொடுத்த அரசு
தமிழக அரசு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவித்துள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. பல மாநிலங்களில் 10 நாட்கள் வரை தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 18 முதல் 21ஆம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில்,
போக்குவரத்து ஊழியர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-25 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை (Ex-Gratia) 2025-2026 வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் (C மற்றும் D) பிரிவு ஊழியர்கள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்கள் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணை தொகை தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு வழங்கப்படும்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் பணிபுரியும் 24816 தகுதியுடைய நபர்களுக்கு ரூ.40,62 கோடி செலவில் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மிகவும் ஈடுபாட்டுடனும், ஊக்கத்துடனும் பணியாற்றுவதையும். எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்திட வழிவகை செய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.