- Home
- Tamil Nadu News
- பள்ளி திறந்ததில் இருந்து சதம் அடித்து ஆடும் வெயில்! மாணவர்கள் அவதி! இந்த மாவட்டத்தில்?
பள்ளி திறந்ததில் இருந்து சதம் அடித்து ஆடும் வெயில்! மாணவர்கள் அவதி! இந்த மாவட்டத்தில்?
தமிழகத்தில் மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.

கத்திரியில் மழை
தமிழகத்தில் மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாகவும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தியது. இதனால் இந்த ஆண்டு கத்திரி வெயில் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆகையால் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக திட்டப்படி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டது.
11 இடங்களில் சதமடித்த வெயில்
ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெயில் சதம் அடிப்பதால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது நேற்றைய நிலவரப்பட்டி சென்னை, தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரி, திருத்தணி, பரங்கிப்பேட்டை, ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது.
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன் தொடர்ச்சியாக ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வெளுத்த வாங்கிய மழை
இதனிடையே நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. போரூர், ராமாபுரம், பூந்தமல்லி, தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம், வேப்பேரி, புரசைவாக்கம், வியாசர்பாடி, ஆவடி, பெரம்பூர், தாம்பரம் மழை பெய்து இரவு குளிர்ச்சியான சூழல் நிலவியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.