பள்ளி மாணவர்களே இன்றுடன் கடைசி நாள்.. ரூ.10,000-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 2026 ஜனவரி 31 அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு.

பள்ளி மாணவர்கள் உதவித்தொகை
பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசு பல்வேறு உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2023- 2024ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1000 என்ற விதம் ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கால அவகாசம் நீட்டிப்பு
இக்கல்வியாண்டிற்கான முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம்
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு ஜனவரி 31ம் தேதியன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்தேர்வுக்கு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி 2025-26ம் கல்வி ஆண்டிற்கான இத்தேர்வு அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு நடைபெற்று வந்த நிலையில், அதற்கான கால அவகாசம் டிசம்பர் 26 முதல் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இன்றுடன் கடைசி நாள்
தற்போது, மாணவர்களின் நலன் கருதி அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கால அவகாசம் ஜனவரி 12ம் தேதி வரை அதாவது இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

