- Home
- Tamil Nadu News
- தலைமை ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த பள்ளிக் கல்வித்துறை
தலைமை ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பாததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த பள்ளிக் கல்வித்துறை
தமிழக அரசு பள்ளிகளில் 1000-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பதவி உயர்வுக்கான தகுதி மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் தொடர்பான நீதிமன்ற வழக்குகளே இந்த தாமதத்திற்குக் காரணம் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தலைமை ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரம் தலைமை ஆசிரியர்கள் தான். அதிலும் குறிப்பாக உயர்நிலைப்பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மிகவும் முக்கியமானவை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான உத்திகளை தலைமை ஆசிரியர்கள் தான் வகுத்து செயல்படுத்த வேண்டும். ஆனால், இவ்வளவு முக்கியமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 300-க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகளிலும், 800-க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை ஒற்றை அரசாணை மூலம் நிரப்ப முடியும். ஆனால் 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுக்கவில்லை என அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார்.
பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககக் கட்டுப்பாடில் உள்ள அரசு மற்றும் நகராட்சி உயா்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களில் 1,036 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்கள் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் பதவி உயா்வு மூலம் நிரப்ப இயலாத நிலை உள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு நிகரான பதவியாக தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் பட்டதாரி ஆசிரியர் பதவி மட்டும் உள்ளதால் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களைச் சேர்க்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை ஆசிரியர்கள்
கடந்த 1.2.2016-ம் தேதிக்குப் பின்னர் முதுநிலை ஆசிரியர் பதவியில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வில் சென்ற 1,187 பணியாளர்களை மீண்டும் முதுநிலை ஆசிரியர்களாக தரம் இறக்காமல் தலைமை ஆசிரியர்களாகவே பணியில் தொடர்ந்து அனுமதிக்கவும் (To draw panel only with BT Assistants without considering PG Assistant) இனி வருங்காலங்களில் மேற்கண்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6-ஆம் தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றநிலையில், வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மற்றும் தொகுப்பு வழக்குகளின் 2.6.2023 நாளிட்ட தீர்ப்பில் இடைநிலை ஆசிரியர்பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் தற்போது உள்ள தங்கள் பணியைத் தக்கவைத்துக் கொள்ளவும், அடுத்த நிலை பதவி உயா்வுக்குச் செல்லவும், ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர்களின் நலன் கருதி தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மட்டும் 2026-ஆம் ஆண்டில் 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

