தமிழ்நாடுன்னா அசால்ட்டா? கங்கையில் ஒருநாள் தமிழன் கொடி பறக்கும்! கனிமொழி சூளுரை
ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் மக்களைப் பாதுகாப்பதில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டினார். பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் கனமொழி
மக்களைப் பாதுகாப்பதில் பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எங்கள் மீது நம்பிக்கை வைத்து குழுத் தலைவர்களாக வெளிநாடு செல்ல வாய்ப்பளித்ததற்கு நன்றி. ஆளும் கட்சி நேருவைப் பற்றி பேசுவதால் இளைஞர்கள் அவரைப் பற்றி படிக்கிறார்கள். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நின்றவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல, தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை.” என அவர் கூறினார்.
மோடி பொறுப்பேற்றறாரா?
“இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எங்களைப் பிரிக்காதீர்கள். 'விஸ்வகுரு' என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்கிறது?” எனவும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
பாஜக அரசின் தோல்வி
“பஹல்காம் தாக்குதலை எப்படி தடுக்கத் தவறினீர்கள்? தாக்குதலுக்கு முன் புலனாய்வு அமைப்புகள் என்ன செய்து கொண்டிருந்தன என அறிய விரும்புகிறேன். பயங்கரவாதத் தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? முந்தைய தாக்குதலில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா? பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் வம்சமே பாதிக்கப்படுகிறது. மக்களைப் பாதுகாப்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது.” என கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
பழி போடும் அமித் ஷா
எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனத்துக்கு பதில் அளித்த கனமொழி, “அமித் ஷா தங்கள் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். காஷ்மீரில் 13 லட்சம் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன இழப்பீடு தரப்போகிறீர்கள்? எவ்விதமான பாதுகாப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? காஷ்மீரில் தங்கும் விடுதிகள், சுற்றுலா வசதிகளில் பலர் முதலீடு செய்துள்ளனர். உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்துகிறார் அமித் ஷா.” என்றார்.
கங்கையை வெல்வோம்
சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி சோழர்கள் பற்றிப் பேசியது குறித்தும் கனிமொழி எம்.பி. கடுமையாக விமர்சனம் செய்தார். "ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தைக் கண்டறிந்துவிடுகிறது பாஜக. ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. திடீரென பிரதமருக்கு சோழர்கள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. சோழன் கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்," என்று கனிமொழி எம்.பி. சூளுரைத்தார்.