குடையை மறக்காதீங்க.. தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 8 வரை பரவலாக மழை பெய்யும். இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 11 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை அப்டேட்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மீது தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்று காலை 10 மணி வரை தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மிக கனமழைக்கும் வாய்ப்பு
இந்த வளிமண்டலச் சூழ்நிலை காரணமாக, தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை, மேலும் 11 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இது தவிர, தேனி, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் மேகமூட்டம்
சென்னை நகரில் வானம் பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இங்கே அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை, குறைந்தபட்சம் 26 முதல் 27 டிகிரி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
மலைப்பகுதிகளில் கனமழை
நாளை (04-08-2025) தமிழகம் முழுவதும் பரந்தளவில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் கடலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் கன முதல் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை இருக்கக்கூடும்.
20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை
05 ஆகஸ்ட் 2025-ம் தேதி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி, தேனி, தர்மபுரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனுடன் புதுச்சேரி, காரைக்காலும் பாதிக்கப்படும் பகுதிகளாக இருக்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.