- Home
- Tamil Nadu News
- உஷார் மக்களே! 3 நாள் பொளக்கப்போகும் வெயில்.. எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம் இதோ!
உஷார் மக்களே! 3 நாள் பொளக்கப்போகும் வெயில்.. எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம் இதோ!
TN Weather Update: தமிழகத்தில் வெயில் பாடாய்படுத்தி வரும் நிலையில், அடுத்த 7 நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் போட்டுத்தாக்கும் வெயில்
தமிழகம் முழுவதும் வெயில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியஸூக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளது. மதிய நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது. அனலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை
கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது. அதாவது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்ப நிலையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-3 செல்சியஸ் வரை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த 7 நாட்களும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்
அதாவது 12-04-2026 முதல் 16-04-2026 வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 12-04-2026 முதல் 14-04-2026 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு உண்டா?
சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு மத்தியப் பிரதேசம் முதல் தென் தமிழகம் வரை விதர்பா, மத்திய மகாராஷ்டிரா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் 12ம் தேதி கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
13-04-2026 முதல் 18-04-2026 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை 12ம் தேதி மற்றும் 13ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

