- Home
- Tamil Nadu News
- ஏற்கனேவே 95% தமிழ்நாட்டுல இருக்கு.. இதென்ன வட இந்தியாவா.? விஜயை கிழிக்கும் நெட்டிசன்கள்
ஏற்கனேவே 95% தமிழ்நாட்டுல இருக்கு.. இதென்ன வட இந்தியாவா.? விஜயை கிழிக்கும் நெட்டிசன்கள்
தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், திமுக அரசை நேரடியாக விமர்சித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் பைக் போன்ற அவரது வாக்குறுதிகளும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.

விஜய் பேச்சு வைரல்
கடந்த சில வாரங்களாக அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய், மீண்டும் நேரடியாக அரசியல் மேடையில் களமிறங்கியுள்ளார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்குப் பிறகு, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு, மீண்டும் மக்கள் சந்திப்பைத் தொடங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அவரது முதல் பெரிய அரசியல் உரை நடைபெற்றது என்றே கூறலாம்.
இந்த நிகழ்ச்சி தனியார் கல்லூரி உள் அரங்கில் நடத்தப்பட்டது. பாதுகாப்பு மற்றும் கூட்ட நிர்வாக காரணங்களால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2,000 பேருக்கு மட்டுமே QR code நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்வில் பேசிய விஜய், "தமிழகத்தில் ஏற்கனவே 95% வளர்ச்சி உள்ளது என்று சொல்வது எப்படி? இது வடஇந்தியா அல்ல… தமிழ்நாடு!" என கூர்மையான கேள்வி எழுப்பினார். இந்த ஒரு வரி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை பொது தரவுகளின் தவறான விளக்கம் என்று விமர்சிக்க, வீரத்தனமாகக் கூறிய punchline என்ற கோணத்திலும் மக்கள் கருத்துக்கள் எழுந்துள்ளன.
தவெக தலைவர் விஜய் வாக்குறுதி
விஜயின் பேச்சு முழுவதும் திமுக அரசைக் குறிவைத்து இருந்தது. “மக்கள் நலனில் உண்மையாக செயல்படும் அரசியல் வேண்டும். பொய் சொல்லி வாக்குகள் பெற்று நாடகம் ஆட முடியாது,” என்று அவர் நேரடியாக விமர்சித்தார். அதே நேரத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை அவர் நேரடியாக குறிப்பிடாதது அரசியல் வட்டாரங்களில் "ஸ்ட்ராடஜிக் சைலென்ஸ்" என பார்க்கப்படுகிறது.
விஜய் தனது உரையில் பழைய அரசியல் வரலாறையும் நினைவுபடுத்தினார். “எம்ஜிஆருக்குப் பின் நடிகர்களின் அரசியல் வெற்றி புதியதில்லை. முன்னாலும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்,” என அவர் கூறினார். தமிழ்நாட்டில் திரைப்பட அரசியல் என்ற வரலாறு நீண்டது. அண்ணா முதல் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா வரைக்கும் அரசியல் மற்றும் சினிமா இணைந்த பயணம் தொடர்கிறது. அந்த வரிசையில் விஜய் தன்னை "அடுத்த கட்ட" தலைவர் என மக்கள் முன் நிலைநிறுத்த முயற்சிக்கிறார்.
விஜய் கூறிய வாக்குறுதிகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அனைவருக்கும் வீடு, பட்டப்படிப்பு வரை கல்வி இலவசம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மோட்டார் சைக்கிள், சுகாதார பாதுகாப்பு திட்டம், பருவமழை முன்னெச்சரிக்கை திட்டம் போன்றவையை குறிப்பிட்டிருந்தார். இந்த வாக்குறுதிகள் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பல நெட்டிசன்கள் “இவை election gift-a? அல்லது reality-a?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மற்றொரு தரப்பு “ஒவ்வொரு குடும்பத்திற்கும் பைக் கொடுப்பது நடைமுறையில் சாத்தியமா?” என கேள்வி எழுப்புகிறது. “டிவி, மிக்சி, கிரைண்டர் கொடுப்பது சாத்தியம் என்றால், இதுவும் சாத்தியம்” என்று விஜய் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் சிலர், “தமிழ்நாட்டில் ஏற்கனவே கல்வி இலவச திட்டங்கள் இருக்கின்றன. புதியதாக என்ன? பைக் கொடுத்தால் பெட்ரோலும் இலவசமா? தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பைக், ஸ்கூட்டர்கள் இருக்கிறது. இது அரசியல் வாக்குறுதியா? ஏற்கனவே தமிழகத்தில் 95% மேல் இது செயல்பாட்டில் இருக்கிறது. இதென்ன வட இந்தியாவா? இதென்ன விஜய் திரைப்படங்களில் பேசும் டயலாக்கா?” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

