- Home
- Tamil Nadu News
- ஒரு இடத்தில் கூட பிஜேபி, அதிமுகவை தாக்காத விஜய்..! ஒரே டார்கெட் திமுக தான்.. சரவெடி பேச்சு
ஒரு இடத்தில் கூட பிஜேபி, அதிமுகவை தாக்காத விஜய்..! ஒரே டார்கெட் திமுக தான்.. சரவெடி பேச்சு
கரூரில் நடந்த சோகத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பை நடத்தினார். சுங்குவார்சத்திரத்தில் நடந்த கூட்டத்தில், அறிஞர் அண்ணாவை மேற்கோள் காட்டி, திமுக அரசை மணல் கொள்ளை போன்றவற்றை கடுமையாக விமர்சித்தார்.

பிஜேபி, அதிமுகவை விமர்சிக்காத விஜய்
கரூரில் தவெக தலைவர் விஜயின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தின் பின் அவர் பொது மேடைகளில் இருந்து விலகிர் இருந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், இன்று மீண்டும் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த மக்கள் சந்திப்பு முற்றிலும் உள் அரங்கில் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஒழுங்கு, பாதுகாப்பு, நுழைவு கட்டுப்பாடு அனைத்தும் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டிருந்தன.
திமுகவை விளாசிய தவெக தலைவர் விஜய்
நிகழ்ச்சி தொடங்கியதும் விஜய் மேடையில் உரையாற்றினார். அவர் தனது உரையை அறிஞர் அண்ணாவை நினைவு கூர்ந்து தொடங்கினார். “இந்த காஞ்சிபுரம் அண்ணாவின் மண்ணு… மக்களுக்காக இருந்த தலைவரின் மதிப்பை பாதுகாப்பது எங்களின் கடமை” என்றார். மேலும், அண்ணாவின் பெயரில் தலைமை வகிக்கும் திமுக தற்போது தங்கள் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகி விட்டதாகவும் கடும் விமர்சனம் செய்தார். "பெயரை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்துகிறார்கள்.
ஆனால் மக்கள் நலனில் என்ன சாதித்தார்கள்?" என்று கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, பாலாறு நதியை எடுத்துக்காட்டி, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் கொள்ளை நடைபெற்றதாக விஜய் குற்றம் சாட்டினார். "22 லட்சம் யூனிட் மணல் எவ்வாறு எடுத்துச்சென்றார்கள்? யார் இந்த அமைப்பை பாதுகாத்தது?" என்று கேள்வி எழுப்பினார். தவெக தொண்டர்கள் “தற்குறி கிடையாது, அரசியலின் ஆச்சர்யக்குறி” என்று கூறி தனது தவெக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்தார்.
சைலன்ட் மோடில் விஜய்
“நான் அரசியலுக்கு வந்தது அதிகாரத்திற்காக அல்ல, மக்கள் நலனுக்காக. அண்ணா சொன்னது போல நான் மக்களிடம் செல்கிறேன்,” என்றார். குறிப்பிட வேண்டியது என்னவெனில், விஜய் தனது உரையில் மத்திய அரசு, பாஜக, அதிமுக குறித்து எந்த குறிப்பும் செய்யவில்லை. முழு உரையிலும் திமுக அரசையே தனது முக்கிய எதிரியாகக் காட்டி கடுமையாக விமர்சித்தார்.
முன்பு நடந்த பிரச்சார கூட்டங்களில் பாஜக மற்றும் அதிமுகவை சில முறை அதிகமாகவும், சில முறை குறைவாகவும் விமர்சித்தார் விஜய். தற்போது திமுகவை மட்டுமே டார்கெட் செய்து தனது உரை முழுக்க பேசியுள்ளது, திமுகவே தன்னுடைய பிரதான எதிரி என்று விஜய் தீர்மானித்துவிட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.

