- Home
- Tamil Nadu News
- பழைய ஓய்வூதியம்... மகளிர் உரிமை தொகை.! முக்கிய அறிவிப்பு வரப்போகுது- தேதி குறித்த சபாநாயகர்
பழைய ஓய்வூதியம்... மகளிர் உரிமை தொகை.! முக்கிய அறிவிப்பு வரப்போகுது- தேதி குறித்த சபாநாயகர்
Tamil Nadu Legislative Assembly session : தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவை கூட்டம்
தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. மேலும் மக்களுக்கான பல்வேறு சலுகைகளை அளிக்க காய் நகர்த்து வருகிறது. அந்த வகையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று அறிவிப்பை வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்போடபர் 14ஆம் தேதி காலை 9.30 கூடுகிறது என தெரிவித்தார்.
அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை
அக்டோபர் 14ஆம் தேதி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் எனவும், மறைந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகள்
இந்த நிலையில் அரசு பணியாளர்களின் முக்கிய கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே ஓய்வூதியம் தொடர்பாக ஆலோசிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையானது இந்த மாத இறுதிக்குள் சமர்பிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டம்
மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவு படுத்த தமிழக அரசு முடிவு செய்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இதுவரை 10லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே மகளிர் உரிமை தொகை தொடர்பாக முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.