விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.! 100% மானியம்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்குகிறது. சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை விவசாயிகள் பயன்படுத்தி நீரை சேமிக்கலாம்.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் முன்னேற்றத்தில் விவசாயத்தின் பங்கு முக்கியமானது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் ஐடி நிறுவனத்தில் பல லட்சத்தில் சம்பளம் வாங்குபவர்கள் சோற்றில் கை வைக்க முடியும். எனவே விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறது. எனவே விவசாயத்திற்காக ஒவ்வொரு அரசும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மானிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு கடந்த வேளாண் பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்திருந்தது. அதன் படி, கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5,000 விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான மானிய உதவி திட்டங்கள்
சிறிய அளவு நெல் நடவு இயந்திரங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதல் 1.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது. ரூ.68 கோடி செலவில் 51 நீர்வடிப்பகுதிகளில் 30,190 ஹெக்டேர் பரப்பளவில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நீர்வடிப்பு மேம்பாட்டுத் திட்டம். பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஆழ்துளைக் கிணறுகள், சூரிய சக்தி மற்றும் மின் சக்தி பம்பு செட்டுகள், நீர் விநியோக குழாய்கள் நிறுவுதல் ஆகியவற்றிற்கு 100% மானியமும் வழங்கப்படுகிறது.
தருமபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி தணிப்பு திட்டத்திற்கு ரூ.110.59 கோடி. 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு அனுப்ப ரூ.3 கோடி ரூபாய் ஒதுக்கியும் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
நுண்ணீர் பாசனம்- 100 % மானியம்
இந்த நிலையில் இந்தியாவில் விவசாய நிலங்களில் நீரை திறம்பட பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான வேளாண் திட்டம் தான் நுண்ணீர் பாசன திட்டமாகும். தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசன திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு நுண்ணியிர் பாசன திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மாநிலத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் இத்திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற பகுதிகளில் இந்த திட்டம் பயனுள்ளதாக உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகபட்சமாக 2 எக்டர் வரையும், பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 5 ஏக்டர் வரையும் நுண்ணீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணியிர் பாசன மானியம்- விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பட்டா, பயிர் அடங்கல், சிறு / குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் கீழ்கண்ட இணையத்தின் (https://tnhorticulture.tn.gov.in:8080/Subsidy/ApplySubsidy) மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உள்ளூர் தோட்டக்கலை அல்லது வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகி, ஆவணங்களுடன் முன்பதிவு செய்து இத்திட்டத்தின் முழு பயனைப் பெறலாம்.
நுண்ணியிர் பாசன முறைகள்:
சொட்டு நீர் பாசனம் : தாவரங்களின் வேர்ப்பகுதியில் துல்லியமாக நீரை வழங்குதல், இதனால் நீர் வீணாவது குறைகிறது.
தெளிப்பு நீர் பாசனம் : நீரை மெல்லிய துளிகளாக தெளித்து பயிர்களுக்கு வழங்குதல், பரந்த பரப்பளவு நிலங்களுக்கு ஏற்றது.
நுண்ணியிர் பாசன முறை நன்மைகள்
குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம்.
உரங்கள் மற்றும் நீர் பயிர்களுக்கு சீராக கிடைக்கும்.
பாரம்பரிய பாசன முறைகளுடன் ஒப்பிடும்போது 30-50% நீர் மிச்சப்படுத்தப்படுகிறது.
துல்லியமான நீர் மற்றும் உரப் பயன்பாடு பயிர் விளைச்சலை 20-50% வரை உயர்த்துகிறது.
மின்சாரம் மற்றும் உரங்களின் பயன்பாடு குறைகிறது.
மண் அரிப்பு மற்றும் நீர் மாசு குறைகிறது.