ஒரு லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி.! தமிழக அரசு அசத்தலான தகவல்
தமிழக அரசு மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 1,01,963 குழுக்களைச் சேர்ந்த 10,56,816 மகளிர் உறுப்பினர்களுக்குப் பலனளிக்கும் வகையில் ரூ. 2118.8 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மகளிர்களுக்கான திட்டங்கள்
மகளிர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும், யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மகளிர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழு இயக்கமானது, இன்று மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தியாவிற்கே முன்னுதாரணமான சுய உதவிக் குழு இயக்கத்தின் வெற்றியானது பிற மாநிலங்களையும் ஈர்த்து, அங்கும் சுய உதவிக் குழுக்கள் அமைய வழி வகுத்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் உதவி திட்டங்கள்
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற ஏழை மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக 14,684 புதிய சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவைகளில் 4,663 சுய உதவிக் குழுக்களுக்கு 4.66 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1,82,274 சுய உதவிக் குழுக்களுக்கு 11800.37 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
9.12 கோடி ரூபாய் மதிப்பில் 15,000 பயனாளிகளுக்கு தொழில் முனைவோர்ஊக்குவிப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பேருந்து பயணம், ஆவின் கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுவின் இயற்கை சந்தை
மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக தமிழக அரசு சார்பாக இயற்கை சந்தை கண்காட்சியையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு கால கட்டங்களில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2118 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், பெண்களுக்கான பொருளாதார அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதற்காக, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 2118.8 கோடி கடனை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் 1,01,963 குழுக்களைச் சேர்ந்த 10,56,816 மகளிர் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைத்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.