- Home
- Tamil Nadu News
- பாஜக கூட்டணியால் அதிமுக பலம் அதிகரிப்பு! தோற்றாலும் குறையாத மவுசு! புட்டு புட்டு வைக்கும் டேட்டா!
பாஜக கூட்டணியால் அதிமுக பலம் அதிகரிப்பு! தோற்றாலும் குறையாத மவுசு! புட்டு புட்டு வைக்கும் டேட்டா!
பாஜக கூட்டணியால் அதிமுக பலம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ADMK's strength increased due to the BJP alliance: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் கணக்குகளை போட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்துள்ளன. கடந்த வாரம் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
AIADMK-BJP Alliance, Tamilnadu
அதிமுக-பாஜக கூட்டணி
பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்தே அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளதாகவும், எந்த கூட்டணி வந்தாலும் வெற்றி பெற முடியாது எனவும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்துள்ளன. அதே வேளையில் அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் ஏற்கெனவே புறக்கணித்துள்ளனர். ஆகவே இந்த இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் அது திமுகவுக்கே சாதகமாக போய் முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவுக்கு கூடுதல் பலம்
ஆனால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததால் அதிமுக கூடுதல் பலத்துடன் இருப்பதாக தேர்தல் ஆணைய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரத்தின்படி கடந்த 3 சட்டப்பேரவை தேர்தல்களாக அதிமுக 38 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளது. அதே வேளையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கடந்த 3 சட்டப்பேரவை தேர்தல்களாக 15 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ளன.
Edappadi Palaniswami, Amitshah
தரவுகள் சொல்லும் சேதி என்ன?
அதிமுக 81 தொகுதிகளில் தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி 62 தொகுதிகளில் தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு 77 தொகுதிகளில் கணிசமான ஆதரவு இருக்கிறது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 91 தொகுதிகளில் கணிசமான ஆதரவு உள்ளது. அதிமுக 38 தொகுதிகளில் பலவீனமாக உள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் கூட்டணி 66 தொகுதிகளில் பலவீனமாக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைந்திருந்தால்...
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரி இருந்திக்கும் என தரவுகள் கூறுகின்றன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அந்த கூட்டணிக்கு 47% வாக்குகள் கிடைத்தன. அதிமுக 23% வாக்குகளையும், பாஜக 18% வாக்குகளையும், மற்ற கட்சிகள் 12% வாக்குகளையும் பெற்றிருந்தன.
அமித்ஷா அல்ல! எந்த ஷா வந்தாலும் சரி! நான் இருக்கும் வரை அது நடக்காது! முதல்வர் ஸ்டாலின் சரவெடி!
DMK, ADMK, BJP
அதிமுக, பாஜக 13 தொகுதிகளை பெற்றிருக்கும்
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்திருந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கிடைத்து இருக்காது. கணிசமான இடங்களை அதிமுக, பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் 41% வாக்குகளை கைப்பற்றி இருக்கும். இது திமுக கூட்டணியை ஒப்பிடும்போது 7% தான் குறைவாகும். அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் திமுக கூட்டணியின் வெற்றி 26 இடங்களாக குறைந்திருக்கும். அதே வேளையில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து 13 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
திமுகவை விட அதிமுகவே ஆதிக்கம்
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆளும்கட்சி அந்தஸ்தை இழந்திருந்தாலும், கடும் எதிர்ப்பலைக்கு மத்தியிலும் தனியாக 33.3% வாக்குகளை பெற்றிருக்கிறது. இது திமுகவின் 37.87% வாக்குகளை விட கொஞ்சம் தான் குறைவு. இதேபோல் 2001 தேர்தலில் 31.4% வாக்குகள், 2006ல் 32.6%, 2011ல் 38.4%, 2016ல் 40.9% என திமுகவை விட அதிமுகவின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் அதிமுகவின் செல்வாக்கு குறையவில்லை என்பதே தெரியவருகிறது.
Tamilnadu 2026 Assembly Elections
கணக்குப் போட்டு பார்த்து இணைந்த கூட்டணி
இதேபோல் பாஜகவின் செல்வாக்கும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. புள்ளி விவரங்களை கணக்குப் போட்டு பார்த்து தான் அதிமுகவும், பாஜகவும் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புள்ளி விவரங்கள் அதிமுக, பாஜக கூட்டணிக்கு சாதகமாக முடியுமா? இல்லை மீண்டும் திமுகவின் கை ஓங்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி.! புகழ்ந்து பேசிய செங்கோட்டையன்