பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் கருத்துக்களுக்கு கடும் பதிலடி கொடுத்த ஸ்டாலின், தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என சூளுரைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: மாநிலங்களின் உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாத காரணத்தினால் தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று நாம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றோம். திமுகவின் ‘பவர்’ என்ன என்று தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இப்போது இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. இதுதான் தி.மு.க-வின் பவர். உண்மை இப்படி இருக்கும்போது, திசை மாறி சென்று கொண்டிருப்பவர்கள், திசை காட்டிகளாக இருக்கின்ற எங்களை பார்த்து திசை திருப்புகிறோம் என்று புலம்ப வேண்டாம்… நான் கேட்கிறேன்.. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே… “நீட் தேர்வில் விலக்கு தருவோம்” என்று உங்களால் சொல்ல முடியுமா? “இந்தியை திணிக்க மாட்டோம்” என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? “தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம்” என்று பட்டியலிட முடியுமா? “தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது” என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா?

ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க, மாநிலங்கள் பிச்சைக்காரர்களா என்ன?

நாங்கள் செய்வது திசைதிருப்புவது என்றால், இதற்கெல்லாம் தெளிவான பதிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் நீங்கள் கொடுக்கவில்லை. அடுத்து, சிறிது நாட்களுக்கு முன்னால், தமிழ்நாட்டுக்கு நம்முடைய பிரதமர் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்திற்கு வந்தார்கள், பாலத்தை திறந்து வைப்பதற்கு வந்தார்கள். வரட்டும். அதை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், அங்கே என்ன பேசிவிட்டு போனார்? “எவ்வளவு கொடுத்தாலும் இங்கே அழுகிறார்கள்” எவ்வளவு நிதி கொடுத்தாலும் நாம் அழுகிறோமாம் என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். நான் மிகுந்த அடக்கத்தோடு, மரியாதையோடு பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புவது, “ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க, மாநிலங்கள் பிச்சைக்காரர்களா என்ன?” யார் கேட்டது, நீங்கள் கேட்டது? அதனால் தான் நினைவுபடுத்துகிறேன்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி! துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம்! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

நீங்கள் பேசியது என்ன? குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது, “ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள்” எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்று புகார் சொன்னார். யார் மோடி அவர்கள். இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை.

நான் அழுது புலம்புவனும் இல்லை

நான் அழுது புலம்புவனும் இல்லை. ஊர்ந்து போய் யார் காலிலும் விழுகிறவனும் இல்லை. உறவுக்குக் கை கொடுப்போம் – உரிமைக்கு குரல் கொடுப்போம் – நமக்கு யார் கற்றுக் கொடுத்தது? – யார் நமக்கு சொல்லிக் கொடுத்தது - நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய வழித்தடத்தில் பயணிக்கின்றவன் நான். ஒன்றிய பா.ஜ.க. அரசு எல்லா வகையிலேயும் நமக்கு தடையை ஏற்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு குடைச்சல் கொடுக்க முடியும் என்று யோசித்து அனைத்து ரூபத்திலேயும் அதை செய்கிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் மீறி, ஒன்றிய அரசே வெளியிடுகின்ற அனைத்து தரவரிசையிலும், அனைத்து புள்ளி விவரங்களிலும் நம்முடைய தமிழ்நாடு தான் முதன்மை இடத்தை மீண்டும் மீண்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன? நம்முடைய திறமையான நிர்வாகம். இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும். நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம். 

அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-1 மாநிலமாக மாற்றுவதற்கு நாங்கள் உழைத்துக் கொண்டே தான் இருப்போம். இதனால் தான் தமிழ்நாடு மட்டும் எப்படி தனித்துவமாக இருக்கலாம் என்று நினைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் –டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. 

இதையும் படிங்க: இது தான் லாஸ்ட்.! அமைச்சர்களுக்கு எச்சரிக்கை.? ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு

தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான்

அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026-ல் திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு out of control தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன் இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார்.