- Home
- Tamil Nadu News
- விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வாங்கியது யார்? எத்தனை கோடிக்கு தெரியுமா?
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வாங்கியது யார்? எத்தனை கோடிக்கு தெரியுமா?
ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமத்திற்கு கைமாறி உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கல்லூரி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி. இது 2001-ம் ஆண்டு விஜயகாந்தின் தாய் மற்றும் தந்தையின் பெயரால் ஸ்ரீ ஆண்டாள் அழகர் என்ற பொறியியல் கல்லூரியை தொடங்கி நடத்தி வந்தார். 75 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி அமைந்துள்ளது. இந்த பொறியியல் கல்லூரியில் பிஇ, பிடெக் படிப்புகளில் 7 பாடப் பிரிவுகளுக்கும், முதுகலைப் படிப்புகளில் 4 பாட பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்துவதற்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. மாணவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கி வந்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒராண்டை கடந்த நிலையில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி தற்போது வேறொரு நிர்வாகத்துக்கு கைமாறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்லூரியை யார் வாங்கியது என்பதை பார்ப்போம்.
தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம்
பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய அளவில் பிரபலமான கல்வி நிறுவனமான தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம், ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வாங்கியுள்ளது. தனியார் கல்வி நிறுவனம் அதனை புதிய பொலிவுடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளிதழ்களில் விளம்பரம்
கடந்த சில ஆண்டுகளாகவே கல்லூரியை நிர்வகிப்பதில் சிரமங்களைச் சந்தித்து வந்ததாலேயே இப்படியொரு முடிவை விஜயகாந்த் குடும்பம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமமானது, கலை & அறிவியல், பொறியியல், மருத்துவ கல்லூரிகள், பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை வாங்கியுள்ள அக்கல்வி நிறுவனம் இதுகுறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்து அதனை உறுதி செய்துள்ளது.