வார விடுமுறை ஊருக்கு போறீங்களா? இதோ சிறப்பு பேருந்து ரெடி!!
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
விஷேச நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகள்
பள்ளிக்கல்வி மட்டுமல்ல உயர்கல்வியில் படித்து முடித்து ஆண்டு தோறும் பல ஆயிரம் மாணவர்கள் வேலையை தேடி வெளியூருக்கு வருகின்றனர். சொந்த ஊரில் வேலை கிடைக்காத காரணத்தால் சென்னை, பெங்களூர் இடங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக சொந்த உறவுகளை பிரிந்து இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர். அப்படி குடும்பத்திற்காக உழைப்பவர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களிலும் தொடர் விடுமுறை நாட்களில் உறவினர்களை சந்திக்கவும்,
உறவினர்களோடு பண்டிகையை கொண்டாடவும் சொந்த ஊர் செல்வார்கள். ஆனால் விஷேச நாட்களில் பேருந்தில் இடம் கிடைக்காதது மட்டுமில்லை. கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கும். இதன் காரணமாக பெரும்பாலான பயணிகள் விஷேச நாட்களில் வெளியூர் செல்லாமல் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
kilambakkam
வார விடுமுறை சிறப்பு பேருந்து
அதுமட்டுமில்லாமல் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு சுற்றுலாவிற்கு பயணிப்பார்கள். அந்த வகையில் வெள்ளிக்கிழமை இரவு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒவ்வொரு வாரமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற செப்டம்பர் 20, 21 மற்றும் 22ஆம் தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 20/09/2024 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Kilambakkam
கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்து
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம். கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 260 பேருந்துகளும், செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர், ஓசூர், திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
tamilnadu bus
கோயம்பேடு மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்து
மாதாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செப்டம்பர் 20ஆம் தேதியன்று 20 பேருந்துகளும் செப்டம்பர் 21ஆம் தேதியன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வார விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து திரும்பும் பயணிகளுக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அந்த வகையில் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5 ஆயிரத்து 730 பயணிகளும், சனிக்கிழமை 2 ஆயிரத்து 706 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6 ஆயிரத்து 312 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
முன்பதிவு செய்ய வேண்டுகோள்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு அரசு போக்குவரத்து கழகம் வலியுறுத்தியுள்ளது. வார விடுமுறையையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டும் பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல தெற்கு ரயில்வே சார்பிலும் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பதிக்கு போக ரெடியா இருக்கீங்களா.? தேவஸ்தான வெளியிட்ட முக்கிய அறிவிப்பு