- Home
- Tamil Nadu News
- பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்.. தயிர் சாதம் கூட இல்ல.. கைவிரித்த ஸ்டாலின், இபிஎஸ்? அடுத்தது என்ன?
பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்.. தயிர் சாதம் கூட இல்ல.. கைவிரித்த ஸ்டாலின், இபிஎஸ்? அடுத்தது என்ன?
Ambasamudram By-Election: திராவிட கொள்கைகளை அடியோடு வெறுக்கும் சீமான், ''ஆரிய கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன்'' என்று ஆவேசமாக பேசினார். கருணாநிதிக்கு கடலில் போனா சிலை வைத்தால் அதை நானே உடைப்பேன் என்று கூறியிருந்தார்.

தமிழக களத்தை புரட்டிப்போட்ட தேர்தல்
2026 சட்டப்பேரவை தேர்தல் தமிழக தேர்தல் களத்தையே புரட்டிப் போட்டு விட்டது. கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளிலேயே தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட கட்சிகளை திரும்பி பார்க்க வைத்தது. பின்பு திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், இடதுசாரிகளை தன் பக்கம் இழுத்து விஜய் முதல்வராகி விட்டார். சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் ஐக்கியமானார்கள்.
டெபாசிட் இழந்த நாம் தமிழர் கட்சி
இதில் முதற்கட்டமாக தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியான தவெக வெற்றி பெற்றது. அதிமுகவில் ராஜினாமா செய்த எம்.எல்.க்கள் மீண்டும் போட்டியிட்டு வெற்றியை ருசித்தனர். இரு தொகுதிகளிலும் தவெகவுக்கு திமுக கடும் போட்டியளித்த நிலையில், தங்களது சொந்த தொகுதியிலேயே அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. மறுபக்கம் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி இரு தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
சட்டப்பேரவைக்குள் நுழைய சீமான் தீவிரம்
அடுத்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளுக்கும், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளன. சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு கடும் போட்டி அளிக்கும் என எதிர்பாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்தது. 2 தொகுதி இடைத்தேர்தல்களிலும் எந்த போட்டியும் அளிக்காமல் எளிதில் சரண் அடைந்தது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் துவண்டு போயுள்ள நிலையில், அடுத்து வரும் இடைத்தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நாம் தமிழர் கட்சி நுழைய வேண்டும் என சீமான் தீவிரமாக உள்ளார்.
திமுக, அதிமுக ஆதரவை ஏற்பேன்
இதனைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதியில் தான் போட்டியிட போவதாக சீமான் அறிவித்தார். தவெகவை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், சட்டமன்றத்துக்கு சென்றால் தவெக அரசுக்கு கடும் குடைச்சல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை புரிந்து கொண்ட திமுகவும், அதிமுகவும் அம்பை தொகுதியில் போட்டியிடாமல் சீமானை பொது வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.
பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என சொல்வார்களா?
இது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலினிடம் கேட்டபோது, ''தேர்தல் தேதி அறிவித்த பிறகு இதுகுறித்து பேசலாம்'' என்றார். இதேபோல் சீமானிடம் கேட்டபோது, ''திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். பசியில் இருக்கும்போது யாரும் பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என சொல்வார்களா?'' என வியக்கத்தக்க விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் சீமானின் இந்த பேச்சை திமுகவினர், அதிமுகவினர் மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியினரும் ரசிக்கவில்லை. ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவை சீமான் எந்த அளவுக்கு கடுமையாக விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
திமுகவை கடுமையாக எதிர்த்த சீமான்
அப்போதைய முதல்வர் ஸ்டாலினையும், அப்போதைய திமுக அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்தார். மேலும் திராவிட கொள்கைகளை அடியோடு வெறுக்கும் சீமான், ''ஆரிய கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன்'' என்று ஆவேசமாக பேசினார். இது மட்டுமின்றி கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைத்தால் அதை நானே உடைப்பேன் என்று கூறி திமுகவினரின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். தொடர்ந்து திமுகவின் ஆணி வேராக இருக்கும் தந்தை பெரியாரையும் கடுமையான சொற்களால் வசைபாடி வந்தார்.
நாம் தமிழர் கட்சியினரே ஆதங்கம்
இதனால் சீமானுக்கு திமுக ஆதரவு கொடுக்க கூடாது என உடன்பிறப்புகள் பலர் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். மறுபக்கம் திமுக, அதிமுக ஆதரவுடன் சீமான் வெற்றி பெற்றால் அது தற்கொலை செய்வதற்கு சமம் என நாம் தமிழர் கட்சியினரே சமூகவலைத்தளத்தில் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். ''தமிழ் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதே திராவிட கொள்கைகளை எதிர்த்து தான். இந்நாள் வரை திராவிடத்தை வசைபாடிவிட்டு அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவது கனவில் கூட நினைக்க கூடாது'' என சில தம்பிகள் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடுநிலையாளர்களின் கருத்து என்ன?
''தமிழக வெற்றிக் கழகம் திராவிடமும், தமிழ் தேசியமும் பேசும் என விஜய் தெளிவாக சொல்லி விட்டார். இதையும் விமர்சித்திருந்த சீமான், 'ஒன்னு ரோட்டுக்கு அந்த பக்கம் நில்லு; இல்லை இந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரியில் அடிபட்டு விடுவாய்' என்று கூறி இருந்தார். இப்படி கூறிய சீமானே, இப்போது திராவிட கட்சிகளின் ஆதரவை ஏற்பது எந்த வகையில் நியாயம்?'' என நடுநிலையாளர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
அரசியலில் நிரந்த நண்பனும், கிடையாது. எதிரியும் கிடையாது
மற்றொருபுறம், ''அரசியலில் நிரந்த நண்பனும், கிடையாது. எதிரியும் கிடையாது'' என்று கிளாசிக் டயாலாக்கை பேசி சீமானுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சிலர், அவர் சட்டமன்றத்துக்குள் சென்றால் விஜய்யை ஆட்டம் காண வைத்து விடுவார் என தங்கள் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படியாக திராவிட கட்சிகளின் ஆதரவை பெற சீமானுக்கு அதிக எதிர்ப்பும், சிறிய ஆதரவும் கிளம்பியுள்ள நிலையில், திமுகவும், அதிமுகவும் சீமானுக்கு ஆதரவு கொடுக்காது என்றே அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக, அதிமுக தனித்து போட்டி
ஏனெனில் சீமானை ஆதரிக்க கட்சிக்குள்ளேயே சலசலப்பு கிளம்பியுள்ளதால், நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளை புறம்தள்ளி விட்டு சீமானை ஆதரிக்க ஸ்டாடலினும் ஒருபோதும் விரும்ப மாட்டார். 5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களின் பெயர்களை தலைமைக்கு அனுப்ப உத்தவிட்டுள்ளார்.
இதுவே திமுக தனித்து போட்டியிடுவதற்கு சாட்சியாக உள்ளது என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல் அதிமுகவும் தங்களது பலத்தை நிருபிக்க தனித்தே போட்டியிட்டும். அதிமுக சார்பில் அம்பை தொகுதி வேட்பாளராக என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெள்ளத்துரை போட்டியிடலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆதரவு இல்லாவிட்டாலும் தனித்து போட்டி
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், திமுக, அதிமுக ஆதரவு கொடுத்து சீமான் வெற்றி பெற்று விட்டால் பரவாயில்லை. ஒருவேளை அவர் தோல்வி அடைந்து விட்டால், அது திராவிட கட்சிகளுக்கு பெரும் பாதகமாக அமைந்து விடும். திமுக, அதிமுகவின் செல்வாக்கு மோசமாக சரிந்து விடும். ஆகவே இந்த ரிஸ்க்கை எடுக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆக மொத்தத்தில் பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமானுக்கு, தயிர் சாதம் கூட இல்லை என ஸ்டானிலும், எடப்பாடி பழனிசாமியும் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகள் ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் தனித்து போட்டியிடுவது உறுதி என்பதில் சீமான் திட்டவட்டமாக உள்ளதாக நாம் தமிழர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





