90% மானியத்தில் உடனே மின் இணைப்பு.. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
தமிழக அரசு 90% மானியத்தில் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 5 முதல் 15 குதிரை திறன் வரை மின் இணைப்பு பெற, 2.50 லட்சம் முதல் 4 லட்சம் வரை வைப்புத்தொகை செலுத்த வேண்டும், இதில் 90% மானியம் தாட்கோ மூலம் வழங்கப்படும்.

நவீன காலத்தில் மின்சார தேவைகள்
நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் மாறி வருகிறார்கள். அந்த வகையில் மின்சாரம் இல்லாமல் ஒரு நாளை அல்ல, ஒரு மணி நேரத்தை கடத்துவதே பெரிய விஷயமாக இருக்கும். அந்த வகையில் திடீரென மின் இணைப்பு தடைபட்டால் அடுத்த நிமிடமே மின்சார வாரிய அலுவலகத்திற்கு போன் பறக்கும். எப்போது மின்சாரம் வரும் என நச்சரிக்க தொடங்குவார்கள். அந்த அளவிற்கு வீட்டில் சமையல் முதல் துணி துவைப்பது வரை அனைத்திற்கும் மின்சாரம் முக்கிய தேவையாக உள்ளது. இந்த நிலையில் விவசாயத்திலும் மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழகத்தில் மின் இணைப்புகள்
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன, இதில் 2.3 கோடி வீட்டு இணைப்புகள் மற்றும் 33 லட்சம் வணிக/தொழிற்சாலை இணைப்புகள் உள்ளது. எனவே தமிழக அரசு சார்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மின் இணைப்பிற்காக பல நாள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு விரைவு விவசாய மின் இணைப்பு வழங்கும் 'தட்கல்' முறையை அறிமுகப்படுத்தியது.
90 % மானியத்தில் மின் இணைப்பு
இதன் படி 5, 7.5, 10, 15 குதிரை திறன் கொண்ட மின் இணைப்பு பெற 2.50 லட்சம் முதல் 4 லட்சம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 90 % மானியத்தோடு மின் இணைப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் நலனில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் துரித மின் இணைப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு, முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படுகிறது.
திட்டத்தின் விவரம்
- 5 குதிரை திறன் கொண்ட மின் இணைப்பிற்கு 2.50 லட்சம் ரூபாய் வைப்பு தொகையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 90 % மானியமாக 2.25 லட்சம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 7.5 குதிரை திறன் கொண்ட மின் இணைப்பிற்கு 2.75 லட்சம் ரூபாய் வைப்பு தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் 90 சதவிகித்ம மானியமாக 2.47 லட்சத்தை திருப்பி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
- 10 குதிரை திறன் கொண்ட மின் இணைப்பிற்கு 3 லட்சம் ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும், அதில் 90 சதவிகிதம் மானியமான 2.70 லட்சத்தை திருப்பி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- 15 குதிரை திறன் கொண்ட மின் இணைப்பிற்கு 4 லட்சம் ரூபாய் வைப்பு தொகையில் 90 சதவிகித மானியமான 3 .60 லட்சம் திருப்பி வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைப்புத் தொகையில் 90% மானியத் தொகையை தாட்கோ மூலம் நேரடியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் செலுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மானியத்தோடு மின் இணைப்பு பெற தகுதிகள்
- " ஆதிதிராவிடர் (அ) பழங்குடியின விவசாயியாக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் < ரூ. 3 இலட்சம்.
- நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருக்க வேண்டும்.
- . நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
- குடும்பத்தினர் தாட்கோ திட்டங்களின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்கக் கூடாது.
- தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : மாவட்ட மேலாளர், தாட்கோ.
- விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.tahdco.com