- Home
- Tamil Nadu News
- இலவசங்களுக்கு பணம் இருக்கிறது.. சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? தமிழக அரசை வெளுத்தெடுத்த உச்சநீதிமன்றம்
இலவசங்களுக்கு பணம் இருக்கிறது.. சம்பளம் கொடுக்க பணம் இல்லையா? தமிழக அரசை வெளுத்தெடுத்த உச்சநீதிமன்றம்
இலவச திட்டங்களுக்கு வழங்க பணம் இருக்கும் நிலையில் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லையா என தமிழக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு
ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மேற்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதிகள்
ஒப்பந்த செவிலிர்களை அரசு சுரண்டுகிறது செய்கிறது. நீங்கள் செவிலியர்களின் உழைப்பை அளவுக்கு அதிகமாக சுரண்டுகிறீர்கள். ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள், அவர்களுக்கு உரிய ஊதியமும் கொடுக்க மறுக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டனர்.
தமிழக அரசு தரப்பில்
மத்திய அரசிடம் இருந்து உரிய பணம் கிடைக்கவில்லை அதனால் செவிலியர்களின் ஊதியம் வழங்க முடியவில்லை என கூறப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். உங்களது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது உங்களுடைய பொறுப்பு தான்.
இலவசங்களுக்கு பணம் இருக்கிறது, சம்பளம் கொடுக்க பணம் இல்லையா..?
இலவசங்களுக்கு கொடுக்க பணம் இருக்கிறது, ஆனால் பணி செய்பவர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீர்கள், ஆனால் செவிலியர்களுக்கு கொடுக்க பணம் இல்லையா? நாட்டிலேயே சிறந்த மாநிலம் என கூறும் தமிழக அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? கல்வி, பொருளாதாரம் என தமிழகம் அனைத்திலும் வளர்ந்த மாநிலம் என கூறும் நீங்கள் சேவை செய்யும் செவிலியர்களுக்கு உரிய ஊதியமளிக்க மறுப்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்ற தமிழக அரசின் வாதத்தை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் மத்திய அரசு, தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.