திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன நீட் தேர்வு ரத்து வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனாலும் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அப்போது பேசிய ஸ்டாலின், ''எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாமல், வயிற்றெரிச்சல் காரணமாக, தி.மு.க. தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது.

தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகள்

நான் கூற விரும்புகிறேன் - ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, நாங்கள் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமல்ல, சொல்லாத வாக்குறுதிகளான காலை உணவுத் திட்டம் - தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதா? புதுமைப்பெண் திட்டம் - தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? தமிழ்ப்புதல்வன் திட்டம் – நாங்கள் வந்தால் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தோமா? நான் முதல்வன் – அதைப்பற்றி குறிப்பிட்டுச் சொன்னோமா? மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 – குறிப்பிட்டுக் காட்டியிருந்தோமா? போன்ற பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொல்லாமலேயே செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்!

இந்தியாவுக்கே முன்னோடி

நம்முடைய அரசு எப்படி இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது என்று ஏராளமான கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடுகிறது; செய்திகளில் சொல்கிறார்கள். இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஏராளமான வட இந்திய யூடியூப் சேனல்கள்கூட ஆய்வு செய்து, திராவிட மாடலை பற்றி அவர்கள் மாநில மக்களுக்கு எடுத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது எதுவுமே சிலருக்குத் தெரியவில்லை! தெரியவில்லை என்று சொல்வதைவிட, தெரிந்தும், மறைக்க விரும்புகிறார்கள்!

பழனிசாமிக்கு தெரியவில்லை

பொய்களை பரப்புவதும், களங்கம் கற்பிப்பதும்தான், காலங்காலமாக அவர்களுடைய அரசியல்! கொள்கையற்ற அந்தக் கூட்டத்திற்கு அதைத் தாண்டி ஒன்றும் தெரியாது! மலிவான அரசியல் செய்கின்ற அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களுக்கு உண்டு. நல்லதை எல்லாம் பார்க்க மாட்டேன் - நல்லதைக் கேட்க மாட்டேன் - உண்மையைப் பேச மாட்டேன் என்று முடிவுடன் இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வழக்கம்போல் இதெல்லாம் தெரியவில்லை.

நீட் தேர்வு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை

பொய்களை வைத்து கருத்துருவாக்கம் செய்யலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், என்றைக்கும் உண்மைக்குதான் வலிமை அதிகம்! நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில், நீட் விலக்கு போன்ற வாக்குறுதிகளை இப்போதைக்கு எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நாங்கள் மறுக்கலையே… நன்றாக கவனியுங்கள் - இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக நாங்கள் முயற்சி செய்யாமல் இருக்கிறோமா? ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் நீட் விலக்குக்கு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அனுப்பினோம். அதை என்ன மாதிரியான சூழ்ச்சிகளை எல்லாம் செய்து ஆளுநர் மூலமாக தடுத்தார்கள். இது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்!

சட்டப்போராட்டம்

அப்போதும் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம்! அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அதை மறைத்து வைத்ததுபோல் நாடகம் ஆடவில்லையே! அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வந்ததும், ஒன்றியத்தில் நமக்கு ஆதரவான அரசு அமையும் என்ற நம்பிக்கையுடன் போராடினோம். தமிழ்நாட்டின் உணர்வை புரிந்துகொண்டு, இந்தியாவின் இளந்தலைவராக இருக்கக்கூடிய மதிப்பிற்குரிய சகோதரர் ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

உரிமைகளை காக்கும் ஆட்சி அமையும்

தமிழ்நாட்டு மக்களான நீங்கள், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணிக்கு வெற்றியை அளித்தீர்கள். ஆனால், ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. அதுவும் பெரும்பான்மை ஆட்சி கிடையாது! சிலருடைய ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சியாகத்தான் அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு எதிரான அவர்களுடைய ஆட்சி நெடுநாள் நீடிக்காது! நான் உறுதியாக சொல்கிறேன் - நிச்சயம் ஒருநாள் நம்முடைய மாநிலத்திற்கான உரிமைகளை காக்கும் ஆட்சி அமையும்! அமையத்தான் போகிறது'' என்று தெரிவித்துள்ளார்.