பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்.? இறங்கி அடிக்க தயாராகும் ராமதாஸ்
பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்து, அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அன்புமணி பாமகவில் இருந்து தற்காலிகமாக நீக்க வாய்ப்பு

பாமகவில் அதிகார மோதல்
பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதல், கட்சியில் அதிகாரப் போட்டி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான சர்ச்சைகளால் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ராமதாஸ் தனது பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு அன்புமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது மோதலை மேலும் முற்றியது.
இதனையடுத்து பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ் தான் தான் பாமக தலைவர் என அறிவித்தார். இதன் காரணமாக இருதரப்பும் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை நாடியது. இரு தரப்பும் போட்டி போட்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுக்கள்
அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 17 அன்று விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள பட்டானூரில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
அன்புமணி மைக்கை தூக்கி வீசி, பனையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கியதாக பேசி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 100 செயலாளர்களை வரவிடாமல் தடுத்தது. ராமதாஸ் மற்றும் அவருடன் உள்ளவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் இழிவான, அவதூறான பதிவுகளை வெளியிட்டது.
விளக்கம் அளிக்க மறுத்த அன்புமணி
கட்சி உட்கட்சி மோதல்களை தீர்க்க சமரச பேச்சுவார்த்தைகளை ஏற்காமல் உதாசீனப்படுத்தியது. ராமதாஸ் அமரும் இடத்திற்கு அருகே ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது. ராமதாஸின் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டி, அதில் ராமதாஸுக்கு காலி நாற்காலி வைத்து, "நல்ல புத்தி கிடைக்க வேண்டும்" என வேண்டியது.
ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் இருந்தபோது கூட்டு பிரார்த்தனை செய்வதாகக் கேலி செய்தது போன்ற 16 குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அன்புமணி உரிய பதில் அளிக்கவில்லை
ராமதாஸ் இன்று எடுக்க போகும் முக்கிய முடிவு
இரண்டாவது முறையும் காலஅவகாசம் வழங்கப்பட்ட நிலையில் அப்போதும் அன்புமணி எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் அன்புமணி மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை பாமகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் அறிவிப்பு வெளியிடவுள்ளார். அதே நேரம் ராமதாஸ் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் அதனை எதிர்கொள்ள அன்புமணி தரப்பு தயாராக உள்ளது. மேலும் பாமகவில் தன் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ்க்கு அதிராகம் இல்லையெனவும் தெரிவித்து வருகிறது.