பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட செங்கோட்டையன்..!
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

mjp
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.வில் ஒவ்வொரு நாளும் பூகம்பம் வெடித்துக் கொண்டு இருக்கிறது. கட்சியில் பல மூத்த தலைவர்கள் நீக்கப்பட்ட நிலையில், வெளியில் சென்ற தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளருக்கு கெடு விதித்த மூத்த தலைவர் செங்கோட்டையனின் கட்சிப் பதவியைப் பறித்து மீண்டும் அதிரடி காட்டினார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவித்த செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதாகக் கூறி திடீரென டெல்லி புறப்பட்டார்.
அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்
டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு பாஜக தலைவர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து தனிமையில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து கோவை வந்த செங்கோட்டையன் தனது வீட்டில் தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
செங்கோட்டையனின் செயலை விமர்சித்த உதயகுமார்
இந்நிலையில் செங்கோட்டையனின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி சுற்றுப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கலாம். அவர்கள் தங்கள் இயலாமையினால் ஏற்படும் பொறாமைக்கும், அந்த பொறாமைத் தீயினால் கட்சி ஒற்றுமை என்ற பெயரை பயன்படுத்தி அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என்று கனவு காண்கின்றனர். அந்த வயிற்று எரிச்சல் மனிதர்களுக்கு தோல்வி தான் பரிசாகக் கிடைக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
நிதானம் இழந்த செங்கோட்டையன்
இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளித்த செங்கோட்டையன், “அவங்க அம்மாவே அங்க செத்து கெடக்காங்க அதை போய் பார்க்க சொல்லுங்க” என்று தெரிவித்த கரு்து சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது வார்த்தைகளின் வீரியத்தை உடனடியாக புரிந்து கொண்ட செங்கோட்டையன் சிறிது நேரத்திலேயே மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆர்.பி.உதயகுமாரின் தாயாரை இழந்து கண்ணீரில் மல்கிக் கொண்டிருக்கும் போது அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவரது தாயாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று கூறி பதற்றத்தைதத் தனித்தார்.