மோடி வெளியிட்ட ராஜேந்திர சோழன் நாணயம் - என்னென்ன இருக்கு தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி தஞ்சையில் ரூ.1,000 மதிப்புள்ள ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த நாணயம் சோழர்களின் கடல் வலிமையையும், உலகளாவிய வர்த்தகத்தையும் நினைவூட்டுகிறது.

முதலாம் ராஜேந்திர சோழன் நினைவு நாணயம்
மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமைகளைப் போற்றும் வகையில், ரூ.1,000 மதிப்புள்ள ஒரு சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் இந்த நாணயத்தை அவர் வெளியிட்டார். இந்த நாணயம் கலைநயம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
நாணயத்தின் தனித்துவமான அம்சங்கள்
இந்த நாணயம் ரூ.1,000 மதிப்பை கொண்டது. இதன் மூலம் ராஜேந்திர சோழனின் பெருமையையும், சோழப் பேரரசின் செல்வச் செழிப்பையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் முன்புறத்தில், இந்தியாவின் இறையாண்மையை அடையாளப்படுத்தும் வகையில், "வாய்மையே வெல்லும்" என பொருள்படும் வகையிலான 'சத்யமேவ ஜெயதே' என தமிழில் பொறிக்கப்பட்டு உள்ளது.
அதன் மேல், இந்திய தேசியச் சின்னமான அசோக சின்னம் உள்ளது.
இடதுபுறத்தில், தேவநாகரி மொழியில் 'பாரத்' என்றும், வலதுபுறத்தில், ஆங்கிலத்தில் 'இந்தியா' என்றும் பதிக்கப்பட்டு உள்ளன.
அசோக தூணுக்கு கீழே, ரூபாய்க்கான அடையாளமும், 'ஆயிரம்' என்ற எண்ணும் தெளிவாகப் பொறிக்கப்பட்டு உள்ளன.
நாணயத்தின் பின்புறத்தில், பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் பிரம்மாண்டமான கடற்படையை காட்சிப்படுத்தும் வகையில், நாணயத்தின் மையத்தில் உருவம் பதிக்கப்பட்டு உள்ளது. இது சோழர்களின் கடல் வலிமையையும், உலகளாவிய வர்த்தகத்தையும் நினைவூட்டுகிறது.
இதேபோன்று, "பேரரசர் ராஜேந்திர சோழன் 1-ன் ஆயிரம் ஆண்டுகள் கடற்படை பயணம்" என்று ஆங்கிலம் மற்றும் தேவநாகரி மொழிகளில் வரி வடிவமாகப் பொறிக்கப்பட்டு உள்ளன. இது அவரது புகழ்பெற்ற தென்கிழக்கு ஆசிய கடல்வழிப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நினைவை குறிக்கிறது.
தூய வெள்ளியால் ஆன நாணயம்
வட்ட வடிவில் 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட இந்த நாணயம் 99.9 சதவீதம் தூய வெள்ளியால் உருவானது. இது நாணயத்தின் தரத்தையும், மதிப்பையும் உயர்த்துகிறது. இதன் எடை 40 கிராம் ஆகும்.
மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை தினத்தை முன்னிட்டு, தஞ்சையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இந்த சிறப்பு நாணயத்தை வெளியிட்டார். திருச்சியில் இருந்து விமானம் மூலம் தஞ்சைக்கு வந்த பிரதமர், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, தோளில் அங்கவஸ்திரம் என முழுக்க முழுக்க தமிழக பாரம்பரிய உடையணிந்து காட்சியளித்தார்.
முன்னதாக, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இறைவனுக்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு நடத்திய பிரதமர், ஆடி திருவாதிரை விழாவையும் சிறப்பித்தார்.
கங்கைகொண்ட சோழபுரம்
11-ம் நூற்றாண்டில் தென்னிந்தியா முழுவதும் வெற்றி கண்டதுடன், தென்கிழக்கு ஆசியாவில் கடற்படையை நிறுவி பெரும் வெற்றியடைந்த ராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, கங்கையாற்றில் இருந்து புனித நீரை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்புமிக்க நாணயம், ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பெருமையையும், இந்தியாவின் கலாச்சாரச் செழுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.