தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில்! இந்த 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
தமிழகத்தில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஈரோட்டில் 102.2 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. அதேபோல் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியில் தலைக்காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளில் வெயில் சதம் அடித்து பொதுமக்களுக்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கியது. நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 102.2 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்ப நிலை பதிவானது. அதேபோல் நாகை 100.76 டிகிரி, மதுரை விமான நிலையம், தொண்டி, தஞ்சாவூரில் 100.4 டிகிரி என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
மேலும் இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்கைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதனிடையே தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.