திருப்பூரில் இந்து முன்னணி அமைப்பின் வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவர் பாலமுருகன் நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருப்பூர் குமாரனந்தபுரத்தை காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் பாலமுருகன் (35). இவர் இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு வழக்கறிஞர் பிரிவு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் அவர் அப்பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
இந்து முன்னணி பிரமுகர் படுகொலை
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடுரோட்டில் 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பதற்றம் போலீஸ் குவிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்து முன்னணி பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கொலைகள்
தமிழகத்தில் அரசியல் மற்றும் அமைப்பு பிரமுகர்கள் மீதான கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
