- Home
- Tamil Nadu News
- நெல்லை டூ நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்! அடுத்த 3 மணிநேரத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்!
நெல்லை டூ நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில்! அடுத்த 3 மணிநேரத்தில் மழை அடிச்சு ஊத்தப்போகுதாம்!
தமிழகத்தில் பல இடங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வாட்டி வதைக்கும் வெயில்
தமிழகத்தில் கடந்த சில பல்வேறு பகுதிகளில் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். அந்த அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மட்டும் 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் 104 டிகிரியும், தூத்துக்குடி 102 டிகிரி, மதுரை நகரம், திருத்தணியில் தலா 101 டிகிரி, ஈரோடு, தஞ்சை, நாகை மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.
இன்றைய வானிலை நிலவரம்
இந்நிலையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம். அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் நாளை வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணிவரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது நெல்லை, தென்காசி, குமரி, நீலகிரி, கோவை, தேனி மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.