- Home
- Tamil Nadu News
- திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர்.. எழுந்த சர்ச்சை.. குவியும் எதிர்ப்பு!
திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர்.. எழுந்த சர்ச்சை.. குவியும் எதிர்ப்பு!
தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது. தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் விடாது என்று கூறிய நீதிபதிகள், அரசியல் காரணங்களுக்காக அரசு தரம் தாழ்ந்து செயல்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி
ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறந்தள்ளிய திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, ''திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கருத்துகளையும் எடுத்து வாதாடியுள்ளது.
சுடுகாட்டில் தான் பிணங்களை எரிப்பார்கள்
ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அதுதான் நடக்கும். சுடுகாடு இருக்கிறது என்றால் கிராமங்களில் அந்த இடத்தில் தான் பிணங்களை எரிப்பார்கள். அதற்கு பதிலாக வேறு எந்த இடத்திலும் எரிக்க மாட்டார்கள். அதெல்லாம் பழக்கவழக்கங்கள் தான். ஆகவே அந்த பழக்கவழக்கங்களை மாற்றாதீர்கள்.
இதுவரை தீபம் ஏற்றப்படாத இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக்கூறி ஏன் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறீர்கள் என்பது தான் எங்களின் கேள்வி. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது'' என்று கூறியுள்ளார்.
அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்
புனிதமான தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு அமைச்சர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்து அமைப்புகள், பல்வேறு அரசியல்வாதிகள் 'அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு மக்கள் தேர்தலில் சரியான பதிலடி கொடுப்பார்கள்' என்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து விரோத திமுக அரசு
இது குறித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில், “சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நாவடக்கம் தேவை
நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதலமைச்சர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

