தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக-வின் மற்ற மூத்த தலைவர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும், தாக்கியும் வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இரண்டு முறை உத்தரவிட்டு இருந்த நிலையில், தமிழக அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை. தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற முடியாது என அரசு திட்டவட்டமாக கூறியது. இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் மனு உள்பட இந்த வழக்கு தொடர்பான 26 மனுக்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி கூறியபடி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. தீபம் ஏற்றுவதால் இருதரப்பினர் இடையே பிரச்சனை நீங்கி ஒற்றுமை ஏற்படும் என நீதிமன்றம் கூறியது.

மேல்முறையீடு செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு

மேலும் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் யாரை அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம், மாவட்ட காவல்துறை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, நீதிமன்றம் சொன்னதால் வழக்கத்துக்கு மாறாக விஷயங்களை அரசு செய்ய முடியாது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளது.

சனாதன தர்மத்தை விமர்சிக்கும் ஸ்டாலின், உதயநிதி

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், ''தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக-வின் மற்ற மூத்த தலைவர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும், தாக்கியும் வருகின்றனர்.

தீபம் ஏற்றுவதை தடுக்கின்றனர்

2023 செப்டம்பர் 2 அன்று, உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என்று பேசினார்.இப்போது முருகப்பெருமானுடன் தொடர்புடைய திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை தடுத்து வருகின்றனர். நீதிபதி சுவாமிநாதன் தீபம் ஏற்றும் வழக்கத்தைத் தொடர அனுமதித்து நீதி வழங்கினார். நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 

இந்து விரோத மனப்பான்மை

இது இந்து தர்மத்திற்கு எதிராகவும், சனாதன தர்மத்திற்கு எதிராகவும் உள்ள ஒரு பாரபட்சத்தையும், ஒரு இந்து விரோத மனப்பான்மையையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் மற்றும் திமுகவினர், இந்தியா கூட்டணி கட்சியினர் இந்துக்களுக்கு எதிராக உள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி மலையில் தீபம் ஏற்ற வேண்டும்'' என்று தெரிவித்தார்.