திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அருகே அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமி நாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. மேலும் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவானது, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும். தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே தீபத் தூண் உள்ளது. பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் தமிழக அரசுதான். தூணில் தீபம் ஏற்றுவது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என அரசு கருதுவது அபத்தம். அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக்கூடாது.
தீபம் ஏற்றுவதால் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் எனக் கூறி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. தீபத் தூண் தங்களுக்குச் சொந்தமானது என வக்ஃபு வாரியம் கூறுவதை ஏற்க முடியாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசாங்கம் தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தீபமேற்றும் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டிருக்க வேண்டும். இரு சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பு பாலமாக இருந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் முடிவு தொடபாக விளக்கம் அளித்த அமைச்சர் ரகுபதி, “கடந்த 100 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. ஆகவே புதிதாக ஒரு நடைமுறையைக் கொண்டு வந்து குழப்பத்தை உருவாக்க வேண்டாம். எங்களைப் பொறுத்தவரை அது தீபத்தூணே கிடையாது. அது எல்லைக் கல் மட்டுமே.
கிராமங்களில் சுடுகாடு இருக்கிறதென்றால் அதனை பிணம் எரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி தான் இதுவும். நீதிபதி ஜிஆர் சுவாமி நாதனின் உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததால் தான் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்க்கமாக உள்ளது. ஆகவே இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


