விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி.! தீபாவளிக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
1,579 சிறு, குறு விவசாயிகளின் ரூ.11.61 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அசல், வட்டி மற்றும் அபராத வட்டி என அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, முதல் தவணையாக ரூ.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயமும் நாட்டின் வளர்ச்சியும்
விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு, விவசாயம் செழித்தால் தான் நாடும் செழிக்கும். அந்த அளவிற்கு விவசாயம் முக்கியமானது. விவசாயிகள் பயிர்களை நட்டால்தான் மக்கள் உணவு அருந்த முடியும். தமிழகத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானிய விலையில் உரங்கள், பயிர் காப்பீடு என பல நன்மை தரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் விவசாயிகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி சூப்பரான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய கடன் தள்ளுபடி
அதன் படி புதுச்சேரியில் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த பயன்பாட்டிற்காக பெறப்பட்ட கடன் திருப்பி செலுத்தாமல் உள்ள அசல் மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு வெளியிட்ட அரசாணை
இதனையடுத்து கடந்த ஓராண்டாக இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இதற்கு அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி விவசாய உறுப்பினர்கள் கடன் பெற்ற மார்ச் மாதம் 31ம் தேதி 2022 ஆண்டு வரையிலான காலத்திற்கு திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ள அசல் வட்டி மற்றும் அபராத வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த உத்தரவின் மூலம் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் ஆயிரத்து 579 சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தொகையான 11.61 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதில் உறுப்பினர்களின் அசல் தொகையான 10.21 கோடியும், வட்டியாக 51.74 லட்சம் ரூபாயும் அபராத வட்டியான ரூபாய் 87.85 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் முதல் தவணையாக அரசால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.