150 ரூபாய் இருந்தால் போதும் 21 இடங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்க்கலாம்.! புதுவையில் தொடங்கிய புதிய திட்டம்
மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து மன அமைதியையும் நிம்மதியையும் தேடி சுற்றுலாவை நோக்கி திரும்புகின்றனர். உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு சுற்றுலா பயணங்கள் அதிகரித்து வருகிறது, மக்கள் தங்கள் பயணத் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். புதுச்சேரி அரசு 21 சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய மினிபஸ் சுற்றுலாவை ரூ.150க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மன நிம்மதியை தேடி சுற்றுலா
நாளுக்கு நாள் இயந்திர வாழ்க்கையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தினந்தோறும் அலுவலக டென்சன் என நிம்மதி இல்லாமல் நாட்களை கழிப்பவர்களுக்கு சுற்றுலா ஒரு மன ஆறுதலையும், நிம்மதியையும் தருகிறது. அந்தவகையில் வேலைப்பளுவிற்கு மத்தியில் ஒரு நாளோ, இரண்டு நாட்களோ பெரும்பாலான மக்கள் சுற்றுலா சென்று வருகிறார்கள். அந்த வகையில் டென்சனை ஓரங்கட்டி விட்டு நாளுக்கு நாள் சுற்றுலாவிற்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வார விடுமுறை நாட்கள் அல்லது பண்டிகை விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு உறவினர் வீடுகள் அல்லது சுற்றுலா தளங்களுக்கு செல்ல தொடங்கிவிடுகின்றனர். தமிழகத்தில் பொறுத்தவரை குளு குளு சீசனையும் இயற்கையையும் அனுபவிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என மலைவாசஸ்தலமும், அருவிகளில் ஆட்டம் போட குற்றாலம், கொல்லிமலை என மலைப்பகுதிகளுக்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ்
இதுமட்டுமின்றி மன நிம்மதிக்காக ஆன்மிக சுற்றுலாவிற்கும் மக்கள் படையெடுத்து வருகின்றனர். ரயில்களின் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களுக்கான ஆன்மிக சுற்றுலா பேக்கேஜ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசின் அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, போக்குவரத்து துறை சார்பாகவும் புரட்டாசி ஆன்மிக சுற்றுலா, ஆடி மாத ஆன்மிக சுற்றுலாவும் இயக்கப்பட்டு வருகிறது. இது இறைநம்பிக்கை அதிகம் உள்ள மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்ததாக இயற்கையான இடங்களுக்கு சென்று வரவும் சுற்றுலா சிறப்பு திட்டங்களை தமிழக சுற்றுலா துறை சார்பாகவும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் சார்பாகவும் இயக்கப்படுகிறது.
Srilanka
வெளிநாடு சுற்றுலா பயணம்
இதன் அடுத்த கட்டம் தான் வெளிநாடு சுற்றுலா, உள்நாட்டில் பல இடங்களை பல முறை சுற்றிப்பார்த்து வெறுத்து போன மக்கள் வெளிநாடுகளுக்கு பறக்க தொடங்கிவிடுகின்றனர். ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே வெளிநாடு சுற்றுலா செல்ல தொடங்கிய நிலையில் தற்போது நடுத்தர வர்க்க மக்களும் வெளிநாடுக்கு செல்ல தொடங்கிவிடுகின்றனர். இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, ஆஸ்திரேலியா என நாடுகளுக்கு ஏராளமான இந்தியர்கள் சென்று வருகின்றனர்.
இவர்களுக்கான கட்டணமும் பேக்கேஜ் அடிப்படையில் 15ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் வரலாம் என்ற அழைப்பும் விடுத்துள்ளது. இதனால் விமான டிக்கெட் மட்டும் எடுத்தால் போதும் எளிதாக வெளிநாடுகளை குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்க்க வாய்ப்பு தற்போதைய காலத்தில் உருவாகியுள்ளது.
சென்னையில் ஒரு நாள் சுற்றுலா பயணம்
இந்தநிலையில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வெளிநாடுகளுக்கோ, வெளியூர்களுக்கோ செல்ல முடியாது என நினைக்கும் மக்களுக்கு தமிழகத்தில் பல் இடங்களில் குறைவான கட்டணத்தில் சுற்றிப்பார்க்கும் வசதியை போக்குவரத்து துறை மேற்கொண்டுள்ளது. பீச், சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் தேவாலயம், அருங்காட்சியகம் என எங்கேயும் இறங்கலாம் என குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை இயக்கப்பட்டது. ஆனால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது இதே போல சேவையை தான் தற்போது புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் 21 இடங்களை சுற்றிப்பார்க்க 150 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 5 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
150 ரூபாயில் 21 இடங்கள் சுற்றுலா
புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்டு, எங்கும் ஏறி. இறங்கும் வசதியுடன் இயக்கப்பட உள்ளது.ஒரு சுற்றுலா இடத்தில் இருந்து அடுத்த இடம் செல்ல குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் சிட்டி டூர் என்ற சுற்றுலாத் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ள இந்த மினி பேருந்துகள் ஹோப் ஆன், ஹோப் ஆப் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. 150 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றால் போதும் புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள 21 சுற்றுலா தளங்களை இந்த பேருந்தில் பயணித்து ரசிக்கலாம்.
எந்த எந்த இடங்கள் தெரியுமா.?
அந்த வகையில் இந்த சுற்றுலா பேருந்து புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, துாய இருதய ஆண்டவர் பசிலிகா, பாண்டி மெரினா, பாரதி பூங்கா, அரவிந்தர் ஆசிரமம், அரவிந்தோ சொசைட்டி காகிதம் தயாரிப்பு நிறுவனம், வில்லியனுார் அன்னை ஆலயம்,
திருக்காமீஸ்வரர் கோவில், ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம், பாண்லே பால் பண்ணை, ஆரோவில் மாதீர்மந்தீர், ஆரோவில் கடற்கரை, காமராஜர் மணிமண்டபம்,லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் கோளரங்கம், முருங்கப்பாக்கம் கைவினை கிராமம், அரிக்கன்மேடு, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம், தவளக்குப்பம் சிங்கிரிக்குடி லட்சுமிநரசிம்மர் கோவில், திருக்காஞ்சி கங்கைவராக நதிஸ்வரர், ஆகிய இடங்களை குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்த்து மகிழும் வகையில் புதுச்சேரி போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.